குன்னூர், டிச. 24: குன்னூரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்கார பொருட்கள் விற்பனை சூடுபிடிக்க துவங்கியது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஸ்டார் அலங்கார தோரணங்கள், பரிசு பொருட்கள் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக குன்னூரில் பெரும்பாலான வீடுகள், கடைகள் ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில் அலங்காரங்கள், தோரணங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார் கட்டப்பட்டுள்ளது. புத்தாண்டு பிறக்கும் வரை ஸ்டார் அலங்கார விளக்குகள் தொங்க விடப்படும். குன்னூரில் உள்ள கடைகளில் கிறிஸ்துமஸ் குடில், சிறப்பு சீரியல் விளக்கு அலங்காரங்கள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை வாங்குவதற்கு கிறிஸ்தவர்கள் ஆர்வம் காட்டி வருவதால் குன்னூர் மார்க்கெட் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை களைகட்டி காணப்பட்டது.
