குன்னூர், டிச.23: குன்னூரில் பேண்ட் இசைக்கு ஏற்றவாறு கல்லூரி மாணவிகளின் குதூகலமான நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். சுமார் 450க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாரம்பரிய கலாச்சாரத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் படுகர் இனமக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் பண்டிகை வரும் ஜன.7ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் சார்பாக படுகர் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாணவிகள் படுகர் மக்களின் பாரம்பரிய உடை அணிந்து பேண்ட் இசைக்கு ஏற்ப நடனமாடி அசத்தி, மகிழ்ந்தனர். மாணவிகளின் குதூகலமான நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது. அதனை தொடர்ந்து கல்லூரி மாணவிகள் பலர் படுகர் இன மக்களின் பாரம்பரிய உணவு மற்றும் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.
