×

தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பு ரூ.100 கோடி சொத்து குவித்த துணை போக்குவரத்து ஆணையர்: கிலோ கணக்கில் தங்க நகை வாங்கி பதுக்கல்; விஜிலென்ஸ் ரெய்டில் ஆவணங்கள் பறிமுதல்

திருமலை: தெலங்கானா மாநிலம், மகபூப் நகர் மாவட்டத்தில் துணை போக்குவரத்து ஆணையராக கிஷன் நாயக் பணி புரிந்து வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்திருப்பதாக கடந்த மே மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த 6 மாதங்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் செகந்திராபாத், பழைய பாய்னப்பல்லி மற்றும் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள கிஷன் நாயக்கின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். மேலும், அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடு என மொத்தம் 16 இடங்களில், சுமார் 13 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.

எந்த நேரத்திலும் ரெய்டு நடத்தப்படலாம் என்ற தகவல் ஏற்கனவே கிடைத்ததால், கிஷன் நாயக் தங்க நகைகளை நகை கடை ஒன்றில் கொடுத்து மறைத்து வைத்திருந்தார். கிஷன் நாயக்கிற்கு நிஜாமாபாத்தில் உள்ள ஒரு ஓட்டல் இருப்பதும் தெரியவந்தது. அவர் தொடர்பான மதிப்புமிக்க சொத்து ஆவணங்கள் இரண்டு சூட்கேஸ்களில் பதுக்கி வைக்கப்பட்டு, அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், இத்தகவலை சேகரித்த பிறகு, கிஷன் நாயக்கின் நெருங்கிய நண்பர்களின் வீடுகளில், ஏசிபி அதிகாரிகள் சோதனை நடத்தி, ஒரு சூட்கேஸில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 26 ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், நிஜாமாபாத், மேடக், ஹைதராபாத் மற்றும் மஹபூப் நகர் ஆகிய பகுதிகளில், அவர் பெரும் சொத்துக்களை வாங்கி வைத்திருந்தது சோதனையில் தெரிந்தது.

இந்த சொத்துக்களின் மதிப்பு மொத்தம் ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், கிலோ கணக்கில் தங்கம், மதிப்புமிக்க நிலங்கள், மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை கிஷன் நாயக் வாங்கி வைத்திருப்பது லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கிஷன் நாயக்கிற்கு சொந்தமான சொத்தின் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்குப்பதிந்து கிஷன் நாயக்கை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்சலகூடா சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கிஷன் நாயக்கின் பெயரில் உள்ள வங்கி லாக்கர் விவரங்களை சேகரித்து, அதனை திறந்தால் மேலும் பல ஆவணங்கள் கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கின்றனர். இச்சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Deputy ,Commissioner ,Telangana ,Tirumala ,Kishan Nayak ,Transport Commissioner ,Mahabubnagar district ,Anti-Corruption Police ,
× RELATED இந்தியாவின் 2 புதிய விமான...