கொல்கத்தா: வங்கதேசத்தில் 18 வயது இந்து வாலிபர் தீபு சந்திர தாஸ் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து பாஜவினர் நேற்று ஊர்வலமாக சென்றனர். ஹவுரா பாலத்தை அவர்கள் நெருங்கிய போது பாஜ தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் பாஜவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேரணியை போலீசார் தடுத்ததால், போராட்டக்காரர்கள் சாலை தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பெட்ரபோல்,கோஜடங்கா,மால்டா,கூச் பைஹெர் ஆகிய வங்க தேச எல்லை சாவடி பகுதிகளில் சனாதனி ஐக்கிய பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதே போல் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஜெயந்திப்பூரில் இருந்து பெட்ரபோல் எல்லை சாவடியை நோக்கி பாஜ எம்எல்ஏ அசோக் கிர்தானியா தலைமையில் பாஜவினர் ஊர்வலம் சென்றனர்.அப்போது பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதே போல் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன.
