×

விஜய் ஹசாரே கிரிக்கெட்: ரம் பம்… பம்… ஆரம்பம் 38 சிக்சர்கள்… பேரின்பம்; 574 ரன் விளாசி பீகார் உலக சாதனை; வைபவ் 190 கனி 32 பந்தில் 100

ராஞ்சி: அருணாசலப்பிரேதசம் அணிக்கு எதிரான, விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி, சகிபுல் கனி, ஆயுஷ் லோஹருகா ஆகியோரின் அட்டகாச சத வேட்டையால், பீகார் அணி, 50 ஓவரில் 574 ரன் குவித்து உலக சாதனை படைத்தது. விஜய் ஹசாரே கோப்பைக்காக ராஞ்சியில் நேற்று நடந்த போட்டியில் பீகார்-அருணாசலப்பிரேதசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய பீகார் அணியின் துவக்க வீரர்களாக மங்கள் மஹ்ரோர், வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர்.

ஒரு புறம் மங்கள் நிதானமாக ஆடி ரன் சேர்க்க மறுபுறம் வைபவ் சூர்யவன்ஷி புயலாய் மாறி எதிரணியின் பந்துகளை துவம்சம் செய்து ரன் வேட்டையாடினார். 84 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 15 சிக்சர், 16 பவுண்டரிகளுடன் 190 ரன்கள் விளாசினார். பின் வந்த பியுஷ் சிங் 66 பந்தில் 77 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஆயுஷ் லோஹருகா 56 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். 5ம் விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் சகிபுல் கனி வெறும் 32 பந்துகளில் சதமடித்தார். இது, ஏ பிரிவு கிரிக்கெட் போட்டிகளில் மிக அதிவிரைவு சதமாக அமைந்தது. மொத்தத்தில் 40 பந்துகளை எதிர்கொண்ட அவர், 12 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் குவித்து எதிரணியை கலங்கடிக்க செய்தார்.

50 ஓவர் முடிவில் பீகார் அணி, 6 விக்கெட் இழந்து 574 ரன் குவித்து, ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையை படைத்தது. இதற்கு முன், ஏ பிரிவு போட்டிகளில் தமிழ்நாடு, 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. பீகார் அணி வீரர்கள் மொத்தத்தில் 38 சிக்சர்கள், 49 பவுண்டரிகள் விளாசி அரங்கத்தை அதிரச் செய்தனர். இதையடுத்து, 575 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆடிய அருணாசலப்பிரேதசம் அணி 42.1 ஓவரில் 177 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், 391 ரன் வித்தியாசத்தில் பீகார் அணி, வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை பதிவு செய்தது.

* முதல் நாள் போட்டிகளில் ரோகித், கோஹ்லி சதம்
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நேற்று நடந்த விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் மும்பை-சிக்கிம் அணிகள் மோதின. முதலில் ஆடிய சிக்கிம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்தது. பின்னர், எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா, 94 பந்துகளில் 9 சிக்சர், 18 பவுண்டரிகளுடன் 155 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால், மும்பை அணி, 30.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 237 ரன் குவித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது.

பெங்களூருவில் நடந்த மற்றொரு போட்டியில் ஆந்திரா-டெல்லி அணிகள் மோதின. முதலில் ஆடிய ஆந்திரா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன் குவித்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க வீரர் பிரியன்ஸ் ஆர்யா 74 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 101 பந்துகளில் 3 சிக்சர், 14 பவுண்டரிகளுடன் 131 ரன் குவித்தார். நிதிஷ் ராணா 77 ரன் எடுத்தார். இவர்களின் மிரட்டல் ஆட்டங்களால் டெல்லி, 37.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன் குவித்து வெற்றி பெற்றது.

Tags : Vijay ,Hazare ,Bihar ,Vaibhav Kani ,Ranchi ,Arunachal Pradesh ,Vaibhav Suryavanshi ,Saqibul Kani ,Ayush Loharuka ,
× RELATED விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் 36...