- விஜய் ஹசாரே
- வைபவ் சூர்யவன்ஷி
- ராஞ்சி
- விஜய் ஹசாரே கோப்பை
- இந்தியன்
- ஒருநாள்
- புயல்
- வைபாவ் சூர்யவன்ஷி
- அருணாச்சல
ராஞ்சி: இந்திய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை (2025-26) இன்று கோலாகலமாகத் தொடங்கியது. முதல் நாளிலேயே ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் 14 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி.
அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பீகார் அணிக்காகக் களமிறங்கிய வைபவ், ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். வெறும் 36 பந்துகளில் சதம் விளாசிய அவர், சர்வதேச அளவில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக இளம் வீரர் என்ற 40 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்தார்.
அவர் 84 பந்துகளில் 190 ரன்கள் குவித்தார்(16 பவுண்டரிகள், 15 சிக்ஸர்கள்). 59 பந்துகளில் 150 ரன்களை எட்டியதன் மூலம், ஏபி டி வில்லியர்ஸின் (64 பந்துகள்) சாதனையை முறியடித்து அதிவேகமாக 150 ரன்கள் கடந்த வீரரானார். தனது 14 வயது 272 நாட்களில் இச்சாதனையைப் படைத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தபோது, வைபவ் 26 ரன்களில் ஆட்டமிழந்தது விமர்சனத்திற்குள்ளானது. அந்த ஏமாற்றத்தைப் பின்னுக்குத் தள்ளி, இன்று சீனியர் வீரர்களுக்கு இணையான முதிர்ச்சியுடனும், அதே சமயம் அசாத்திய துணிச்சலுடனும் ஆடி ரன் மழை பொழிந்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியைத் தொடர்ந்து, கேப்டன் சகிபுல் கனியும் (32 பந்துகளில் சதம்) மிரட்ட பீகார் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. இதன் மூலம் 2022-ல் தமிழ்நாடு அணி (506 ரன்கள்) படைத்த சாதனையை பீகார் முறியடித்துள்ளது.
