×

டிச.27, 28ம் தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் நீர்ப்பறவை கணக்கெடுப்பு: 25 இடங்களில் நடைபெறுகிறது

 

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் டிச.27 மற்றும் 28ம் தேதிகளில் நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு 25 இடங்களில் நடைபெற உள்ளது. இதில், வனத்துறையினர், பறவை ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்மாய், குளங்கள், அணைப் பகுதிகளில் வசிக்கும் நீர்ப்பறவைகளை ஆண்டுதோறும் கணக்கெடுப்பது வழக்கம். இதன்படி இந்தாண்டு கணக்கெடுப்பு டிச.27 மற்றும் 28ம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் சுமார் 25 இடங்களில் நடைபெறுகிறது. இதன்படி ராஜபாளையம் பகுதியில் தேவதானம், கருங்குளம், ராஜபாளையம் 6வது மைல் அணை, சித்திரைப்பட்டி வாகைக்குளம், புளியங்குளம், இரட்டைக்குளம், புதுக்குளம், ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடி குளம் மற்றும் சாஸ்தா கோயில் அணை, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாய், கூமாப்பட்டி விராக சமுத்திரம்,

குல்லூர் சந்தை அணை, பிளவக்கல் பெரியாறு அணை, வத்திராயிருப்பு பகுதியில் கோவிலாறு அணை, கொடிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அணை மற்றும் இருக்கன்குடி அணை, சாப்டூர் பகுதியில் கோட்டையூர் அணை, சிவகாசியில் வெம்பக்கோட்டை அணை, நரிக்குடி அருகே உலக்குடி அணை ஆகிய பகுதிகளில் நீர்ப்பறவை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பதற்காக வில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன் உத்தரவின் பெயரில் ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியாக குழுக்களாக நியமிக்கப்பட்டு, நீர்ப்பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இதற்கான ஏற்பாடுகளை ரேஞ்சர் செல்லமணி தலைமையில் வனத்துறையினர் செய்து வருகின்றனர். இந்த பறவைகள் கணக்கெடுப்பில் வனத்துறையினர், பறவைகள் ஆர்வலர்கள், மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Tags : Virudhunagar district ,Srivilliputhur ,Virudhunagar district… ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி...