×

முதுமலை வனப்பகுதியில் கர்ப்பிணி யானை மர்மச்சாவு

 

 

 

ஊட்டி: முதுமலை, தெங்குமரஹாடா வனத்தில் கருவுற்றிருந்த பெண் யானை உயிரிழந்து கிடந்தது. குட்டி ஈனும் போது ஏற்பட்ட பிரச்னையில் இறந்திருக்கலாம் என முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெங்குமரஹாடா அருகே பூச்சப்பள்ளம் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் ஒரு பெண் யானை இறந்து கிடந்ததை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் தெப்பகாடு சம்பவயிடத்திற்கு வனக்கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையில் ஊட்டி வனப்பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர், தமிழ்நாடு வன மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் மைய அலுவலர் நந்தகுமார், கல்லாம்பாளையம் வனக்குழு தலைவர் மற்றும் வனப்பணியாளர்கள் வந்தனர்.

பின்னர் யானையின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. இறந்த பெண் யானைக்கு வயது சுமார் 40 வயது இருக்கலாம் என்றும், யானை கருவுற்றிருந்தது என்பதும் குட்டி ஈனும் போது ஏற்பட்ட பாதிப்பினால் இறந்திருக்கலாம் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து, அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன் முடிவுகள் வந்த பின்னரே யானை இறப்பிற்கான காரணத்தை உறுதியாக கூற இயலும் என வனக்கால்நடை மருத்துவர் தெரிவித்தார். உடற்கூராய்விற்கு பிறகு யானையின் உடல் வனவிலங்குகளுக்கு இரையாக அங்கேயே விடப்பட்டது.

Tags : Mudumalai forest ,DEMUMALAI, TENGUMARAHADA FOREST ,Nilagiri District ,Mudumalai Tigers ,Tengumarahada ,
× RELATED கடலூர்: திட்டக்குடி அருகே அரசுப்...