ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள சிம்போடியம் வகை ஆர்கிட் மலர் அலங்காரத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முதல் சீசனுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பூங்காவில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. கண்ணாடி மாளிகையில் மட்டும் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு வகையான மலர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் பெகோனியா, பால்சம், லிசியந்தஸ், சைக்ளோமென், ஆர்கிட், அந்தோரியம் உள்ளிட்ட பல்வேறு மலர் வகைகளும், கேக்டஸ் எனப்படும் பல்வேறு வகையான கள்ளிச் செடிகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இதே போல் பல்வேறு வகையான ஆர்கிட் மலர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. சிம்போடியம் வகை ஆர்கிட் மலர்கள் கண்ணாடி மாளிகையில் நுழைவாயில்பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த வகை மலர்கள் தற்போது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன், அவற்றின் முன் நின்றுபுகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
