தக்கலை அருகே ₹76.40 லட்சம் கொள்ளையில் நகை கடை கார் டிரைவர் உள்பட 5 பேர் அதிரடி கைது 15 மணி நேரத்தில் தனிப்படை மடக்கியது

தக்கலை, ஜன.21 : கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் சம்பத் (46). இவர் நெய்யாற்றின்கரையில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது நகை கடையில் இருந்து குமரி, திருநெல்வேலி பகுதிகளில் உள்ள நகை கடைகளுக்கு தங்கம் கொண்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன் தினம் (19ம்தேதி) காலை திருநெல்வேலியில் நகை கடை நடத்தி வரும் தனது மருமகன் சுசாந்த்துக்கு ஒன்றரை கிலோ தங்கத்தையும், நாகர்கோவிலில் உள்ள ஒரு  நகை கடைக்கு 800 கிராம் தங்கத்தையும், தனது நகை கடை ஊழியர்கள் 3 பேரிடம் சம்பத் கொடுத்துள்ளார். இவர்கள் மூன்று பேரும் காரில், தங்க நகைகளுடன் குமரி மாவட்டம் வந்தனர். இதில் ஒன்றரை கிலோ தங்கத்தை, தக்கலை அருகே உள்ள அழகியமண்டபத்தில் வைத்து சம்பத் மருமகன் சுசாந்த் பெற்றுக் கொண்டார். அதற்கான பணம் ₹76.40 லட்சத்தை கொடுத்துள்ளார். பின்னர் இவர்கள் மூவரும் நாகர்கோவில் வந்து, 800 கிராம் தங்கத்தை நகை கடை ஒன்றில் கொடுத்து விட்டு ₹40.44 லட்சம் பெற்றுள்ளனர். இந்த பணத்துடன் காலை 8 மணியளவில் திருவனந்தபுரம் சென்று கொண்டு இருந்தனர். நாகர்கோவில் அடுத்த வில்லுக்குறி அருகே உள்ள காரவிளை பகுதியில் கார் சென்று கொண்டு இருந்த போது 4 பேர் காரை வழி மறித்தனர். இவர்கள் 4 பேரில், 2 பேர் போலீஸ் சீருடையில் இருந்தனர். உங்கள் காரில் ஹவாலா பணம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே காரை சோதனை செய்ய வேண்டும் என்றவர்கள், காரில் இருந்த 3 பேரின் செல்போன்களை பறித்துள்ளனர். பின்னர் காரில் ஒரு பேக்கில் இருந்த ₹76.40 லட்சத்தை எடுத்துக் கொண்டு மற்றொரு காரில் ஏறி தப்பினர்.

இது குறித்து நகை கடை ஊழியர்கள், நெய்யாற்றின்கரையில் உள்ள சம்பத்திடம் தகவல் தெரிவித்தனர். அவர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் பயிற்சி ஏ.எஸ்.பி. சாய் பிரணித், தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயன், அருளப்பன், சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  விசாரணை நடந்தது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் உள்ள கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் பணத்தை வழிப்பறி செய்தவர்கள் தப்பிய கார் பதிவு எண் சிக்கியது. அதன் மூலம் தொடர்ச்சியாக நடந்த விசாரணையில், கேரள மாநில காட்டாக்கடை குற்றியாணிகாடு பகுதியை சேர்ந்த சஜின்குமார் (37), நெய்யாற்றின்கரை பெருங்கடவிளா பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (40), நெய்யாற்றின்கரை பாரியோடு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (34), நெய்யாற்றின்கரை மாவர்த்தலவீடு பகுதியை சேர்ந்த கண்ணன் (29) ஆகியோர் தான் போலீசாக நடித்து ₹76.40 லட்சத்தை வழிப்பறி செய்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் 4 பேரையும் நேற்று அதிகாலையில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இவர்களை தக்கலை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் ₹76.40 லட்சத்தை வழிப்பறி செய்தவர்கள், அதை ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த தகவலை கூறினர். இதையடுத்து அந்த பணத்தையும் போலீசார் மீட்டனர்.

கைதானவர்களிடம் நடந்த விசாரணையில், நகை கடை ஊழியர்களின் கார் டிரைவராக இருந்த நெய்யாற்றின்கரை மார்த்தவல வீடு பகுதியை சேர்ந்த கோபக்குமார் (37) கொடுத்த தகவலின் பேரில் தான், வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர். அவர் தான் மூளையாக செயல்பட்டு இந்த சம்பவத்துக்கு காரணமாக இருந்துள்ளார்.  இதையடுத்து கோபக்குமாரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைப்பற்றப்பட்ட பணமும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. புகார் வந்த சுமார் 15 மணி நேரத்தில் துரிதமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. பத்ரி நாராயணன் பாராட்டினார். வழிப்பறி கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?  இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.பி. பத்ரிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: காலை 8 மணிக்கு வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது. ஆனால் காலை 11 மணிக்கு தான் காவல் நிலையத்துக்கு புகார் வந்தது. உடனடியாக புகார் தெரிவித்திருந்தால், எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் அவர்களை பிடித்திருக்க முடியும். இந்த சம்பவத்தில் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகள் தான் மிக முக்கியமானதாகும். கார் பதிவு எண் போலி என்பது தெரியவந்தது.

இருப்பினும் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் அவ்வப்போது போனில் பேசிய காட்சிகள், கேமராவில் இருந்தன. அதன்படி , நகை கடை ஊழியர்கள் வந்த காரில் இருந்தவர்களிடம் மாறி, மாறி நடத்திய விசாரணையில் டிரைவர் கோபக்குமார் உதவியுடன் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து துரிதமாக செயல்பட்டு அனைவரையும் கைது செய்து உள்ளோம். சந்தேகப்படும்படி நபர்கள் நடமாட்டம், கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக  பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

வருமான வரித்துறை விசாரணை

கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் அவர்கள் கொடுத்ததாக கூறப்படும் நகைகளுக்கு கணக்கு உள்ளதா? என எஸ்.பி. பத்ரி நாராயணனிடம் கேட்ட போது, வருமான வரித்துறை தான் இது தொடர்பாக விசாரணை நடத்தும். எங்களை பொறுத்தவரை வழிப்பறி செய்யப்பட்ட பணத்தை மீட்டு உள்ளோம். இந்த பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்றார்.

Related Stories: