×

காந்தி பெயர் மாற்றத்தை கண்டித்து இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்

சென்னை: காந்தி பெயர் மாற்றத்தை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது. கிராமம் முழுவதும் அணி திரண்டு போராட்டத்தை முதல்வர் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை செல்வப்பெருந்தகை முன்வைத்தார். கடந்த 2005ம் ஆண்டு, ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம்’ கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்திற்கு சூட்டப்பட்டிருந்த காந்தியின் பெயரை நீக்கிவிட்டு, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையுடன் கிராமப்புற வேலை வாய்ப்பை பிணைக்கும் வகையில், வேலைவாய்ப்புக்கான வளர்ச்சியடைந்த பாரத உத்தரவாத திட்டம் கொண்டுவரப்படுகிறது.

இதற்கான மசோதா, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

அப்போது, ஒன்றிய பாஜ அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மகாத்மா காந்தி புகைப்படத்துடன் அனைவரும் பங்கேற்றனர். இதில், இந்தியா கூட்டணி சார்பில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். திராவிட கழகத் தலைவர் கி.விரமணி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வந்தியத்தேவன், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அரவிந்த் ராஜ், ராகேஷ் மற்றும் ஆம் ஆத்மி வசீகரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பாளர் அபுபக்கர், இந்திய கம்யூனிஸ்ட் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், இமயா கக்கன், பொதுச் செயலாளர் டி.செல்வம், அமைப்பு செயலாளர் ராம் மோகன், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, ஆர்டிஐ பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, மாநில செயலாளர் முனீஸ்வர் கணேசன், ஓ.பி.சி.பிரிவு மாநில தலைவர் டி.ஏ.நவீன், இலக்கிய அணி தலைவர் புத்தன், நிர்வாகிகள் எஸ்.எம்.குமார், டி.என்.அசோகன், பாக்கியராஜ், ஆனந்த், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜேசகரன், டில்லி பாபு, கவுன்சிலர்கள் சுகன்யா செல்வம், சர்க்கிள் தலைவர் கராத்தே செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : India Alliance ,Gandhi ,Chennai ,Selvapperundhagai ,Chief Minister ,Mahatma Gandhi… ,
× RELATED திருப்பூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்...