×

மார்கழி மாதத்தையொட்டி கலர் கோலமாவு விற்பனை அமோகம்

திருவாரூர், டிச. 17: மார்கழி மாதத்தையொட்டி திருவாரூர் பகுதிகளில் கலர் கோலமாவு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி பண்டிகையானது வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். பின்னர் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவானது நடைபெறும். அதன்பின்னர் மார்கழி மாதம் என்பது முழுவதும் பக்தி மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாதம் துவக்கம் முதல் முடிவு வரையில் கோயில்களில் அதிகாலை நேரத்திலேயே பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டு இறைவனுக்கு பூஜைகள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

மேலும் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனமும், பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதேசியையொட்டி பகல் 10 மற்றும் இரவு 10 நிகழ்ச்சியும், அனுமனின் திருஅவதாரம் நிகழ்ச்சியும் நடைபெறுவதும். மேலும் வழக்கமாக வீடுகளில் பெண்கள் சூரியன் உதிப்பதற்கு முன்பாக நகர்புறங்களில் தண்ணீர் கொண்டும் கிராமப்புறங்களில் சாணம் கலந்த நீர் கொண்டும் வாசல்களில் தெளித்து அதன் பின்னர் கோலமிடுவது வழக்கம். மார்கழி மாதத்தில் மட்டும் அதிகாலை 4 மணி அளவிலேயே எழுந்து சுமார் 2 மணி நேரம் வரையில் 6 மணிக்குள் தங்களது வீட்டு வாசல் முதல் சாலை வரையில் மிகப்பெரிய கோலமாக போடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அவ்வாறு பெரிய கோலம் போடும்போது எதிர்வீட்டு கோலத்தை தொடும் அளவில் 2 பக்கங்களிலும் கோலங்கள் போட்டிருப்பது அந்த வழியாக செல்வோரை கண்கொள்ள காட்சியில் ஆழ்த்தும். மேலும் சாதாரண நாட்களில் வெள்ளை நிற கோலமாவு கொண்டு கோலம் போடப்பட்டுகிறது. இந்த மார்கழி மாதத்தில் பெரும்பாலான வீடுகளில் கலர் கோலமாவினை கொண்டு தினமும் விதவிதமாக சுவாமி படங்கள், பறவைகள் மற்றும் இயற்கை சின்னங்கள் போன்றவையும் கோலமாக போட்டு மகிழ்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி நடப்பாண்டில் இந்த மார்கழி மாதமானது நேற்று துவங்கி நடைபெற்று வரும் நிலையில் தங்களது வீடு வாசல்களில் பெண்கள் கோலம் போடுவது நடைபெற்று வருகிறது. இதனையொட்டி திருவாரூர் நகர் பகுதிகளில் கலர் கோலமாவு விற்பனையானது அமோகமாக நடைபெற்று வருகிறது.

Tags : Margazhi ,Thiruvarur ,of Diwali ,Aippasi ,Tamil ,Karthigai Deepam festival ,Karthigai ,
× RELATED தனியார் கல்லூரியில் நடக்கும்...