தஞ்சாவூர், டிச.17: தஞ்சையில் பனிப்பொழிவு காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. இதன் தொடக்கத்திலும், பின்னர் டிட்வா புயல் காரணமாக மழை கொட்டியது. இன்னும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. வழக்கமாக பனிப்பொழிவு தொடங்கிவிட்டால் மழை குறைந்து விடும் என்பார்கள். அதற்கேற்ப மழை குறைந்து தற்போது பனிப்பொழிவு தான் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 3 நாட்களாக பனிப்பொழிவின் காரணமாக கடும் குளிர்நிலவி வருகிறது.
வழக்கமாக கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்கள் வரை கடும் குளிர் இருக்கும். இதனால் இதனை குளிர்காலம் என்பார்கள். பனிப்பொழிவு காரணமாக குளிரும் அதிகளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக கடும் குளிர் காலை 9 மணி வரை நீடித்தது. வயல்வெளிகள் தெரியாத அளவுக்கு காலை 7 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டது. மேலும் நடவு செய்த நெற்பயிர்களிலும் அதிக அளவு பனித்துளிகள் காணப்பட்டன. பனியானது வெண்மேகங்கள் போன்று காணப்பட்டன. இது பொதுமக்களுக்கு ஊட்டி, கொடைக்கானலில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர். இருப்பினும் எதிரே வந்த வாகனங்கள், முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாததால் மெதுவாகவே சென்றன. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்று பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. பஸ்களும் காலை நேரத்தில் விளக்கை எரியவிட்டபடி சென்று வந்தன. அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்பவர்களும், இந்த பனிபொழிவு காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஸ்வெட்டர், மப்ளர் போன்றவற்றை அணிந்து செல்வதை காண முடிந்தது. வெயில் அடிக்கடி தொடங்கிய பின்னர் குளிர் மெல்ல, மெல்ல விலகியது. மாலை 4 மணிக்கு பிறகு மீண்டும் குளிர் தொடங்கியது.
கடும் குளிர் காரணமாக மக்கள் இருமல், சளி போன்ற தொந்தரவுகளால் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவனைகள், தனியார் மருத்துவனைகளிலும் சளி, இருமல் காரணமாக அதிகமானோர் சிகிச்சைக்கு வந்த வண்ணம் உள்ளனர். தற்போது குளிர் காலம் தொடங்கிவிட்டதால் சாலையோரங்களில் ஸ்வெட்டர், மப்ளர் தற்காலிக கடைகள் அதிக அளவில் முளைத்துள்ளன. அங்கும் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
