×

மார்கழி மாதத்தையொட்டி திருப்பதி கோயிலில் இன்று முதல் திருப்பாவை சேவை: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: மார்கழி மாதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை சேவை நடைபெறுகிறது. ஆந்திராவில், மாதங்களில் புனிதமான மார்கழி மாதம் நேற்று பிற்பகல் 1.23 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று(17ம் தேதி) முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுர பாராயணம் நடைபெறுகிறது. ஆண்டாள் எழுதிய 30 பாசுரங்களில் தினம் ஒரு பாசுரம் என வரும் ஜனவரி 14ம் தேதி வரை ஏழுமலையான் சன்னதி முன்பு பாராயணம் செய்யப்படும்.

இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஏழுமலையான் கோயிலில் இரவு ஏகாந்த சேவையின்போது, போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு பதிலாக கிருஷ்ணர் சிலையை ஊஞ்சலில் வைத்து ஏகாந்த சேவை நடத்தப்படும். மற்றொரு தனித்துவமான அம்சமாக ஏழுமலையானுக்கு வில்வ இலைகளால் சஹஸ்ர நாமார்ச்சனை செய்யப்படும். அதேபோல், ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்படும் கிளி மாலைகள் அணிவித்து அலங்கரிப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags : Tirupati temple ,Margazhi ,Devasthanams ,Tirumala ,Tirupati Ezhumalaiyan temple ,Suprapada ,Andhra Pradesh ,Tirupati Ezhumalaiyan temple… ,
× RELATED 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள்...