×

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள் செய்யும் விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் பெயர் நீக்கம், மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றுதல் என 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் செய்யும் விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மசோதாவை விரிவாக ஆய்வு செய்ய நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப வேண்டுமென வலியுறுத்தின.

நாடு முழுவதும் கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்கள் வருடத்தில் குறைந்தபட்சம் 100 நாட்கள் உத்தரவாதத்துடன் கூடிய ஊதியத்துடன் வேலைவாய்ப்பை பெறும் வகையில் கடந்த 2005ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி பல முக்கிய மாற்றங்களுடன் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டம் (கிராமம்) என்ற திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய திட்டம் சுருக்கமாக விபி-ஜி ராம் ஜி என அழைக்கப்படும். இதற்கான விபி-ஜி ராம் ஜி மசோதாவை ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.

இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்திற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திமுக எம்பி டிஆர்.பாலு பேசுகையில், ‘‘மகாத்மா காந்தி கிராமங்களில் வாழ்ந்து அங்குள்ள ஏழைகளின் நலனுக்காக பாடுபட்டார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த உன்னதமான திட்டத்தை கொண்டு வந்தார். இது ஏழைகள் 100 நாள் வேலைவாய்ப்பை பெற உதவியது. ஆனால் தற்போதைய அரசால் தேசத்தந்தை கேலி செய்யப்படுகிறார்’’ என்றார்.

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, ‘‘மகாத்மா காந்தி வேலைஉறுதி திட்டம் புரட்சிகரமான திட்டம். அந்த திட்டம் நிறைவேற்றப்பட்ட போது அவையின் அனைத்து உறுப்பினர்களாலும் ஆதரிக்கப்பட்டது. ஆனால் இப்போதைய மசோதா ஏழைகளின் வேலைவாய்ப்பு உரிமைகளை பலவீனப்படுத்துகிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த மசோதாவின் கீழ், இந்த திட்டத்தின் மீதான ஒன்றிய அரசின் கட்டுப்பாடு அதிகரிக்கும். அதன் பொறுப்பு குறையும். மகாத்மா காந்தி எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்தவர். அவரை பெயரை நீக்குவது அவமதிப்புக்கு சமம். எனவே இந்த மசோதாவை விரிவான ஆய்வு செய்ய நாடாளுமன்ற ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்’’ என்றார்.

காங்கிரஸ் எம்பி சசிதரூர் பேசுகையில், ‘‘இந்த மசோதா வெறும் நிர்வாக திருத்தத்தை மட்டும் செய்யவில்லை. திட்டத்தின் ஆன்மா, தத்துவ அடித்தளத்தின் மீதான தாக்குதலை செய்கிறது. இதற்கு ராமரின் பெயரை சூட்டி ராமரை அவமானப்படுத்தாதீர்கள்’’ என்றார். ஆனாலும் கடும் எதிர்ப்பை மீறி மசோதாவை அறிமுகம் செய்த ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அளித்த பதிலில், மகாத்மா காந்தியை நம்புவது மட்டுமல்ல, அவரது கொள்கைகளையும் இந்த அரசு பின்பற்றுகிறது. முந்தைய அரசுகளை விட மோடி அரசு கிராமப்பற வளர்ச்சிக்கு நிறை செய்துள்ளது’’ என்றார்.

இதைத் தொடர்ந்து மகாத்மா காந்தியின் புகைப்படங்களுடன் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த 3 நாள் முக்கியம்; காங். கொறடா உத்தரவு
விபி-ஜி ராம் ஜி சட்ட மசோதா மற்றும் அணுசக்தி துறையை நிர்வகிக்கும் சட்டங்களை திருத்துவதற்கான மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் பரிசீலனைக்கும், நிறைவவேற்றுவதற்கும் வர வாய்ப்புள்ளதால் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி 3 நாட்கள் காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 19ம் தேதியுடன் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைய உள்ளது.

Tags : Lok ,Sabha ,New Delhi ,Mahatma Gandhi ,Lok Sabha ,
× RELATED 7 பஸ்கள், 3 கார்கள் தீப்பற்றி எரிந்த...