×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 11.66 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டபணிகள்

*கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு

அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டத்தில் 11.66 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சி திட்டபணிகளை கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலெக்டர் அருணா தலைமையில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அஜய் யாதவ் நேரில் பார்வையிட்ட பின்னர் தெரிவித்ததாவது, தமிழக முதல்வர் ஏழை, எளிய பொதுமக்கள் நல்வாழ்வு வாழ்ந்திடும் வகையில் பல்வேறு மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

இத்தகைய திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழக முதல்வர் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்திடவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணித்திடவும், இயற்கை பேரிடர் காலங்களில் மாவட்ட கலெக்டர் அவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிடவும், மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கி ஊராட்சியில், கூட்டுறவுத் துறையின் சார்பில், தாயுமானவர் திட்டத்தின் மூலம் குடிமைப்பொருட்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படுவது குறித்தும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.39.12 லட்சம் மதிப்பீட்டில் திருநள்ளுர் வடக்கு கொத்தமங்கலம் இணைப்பு சாலை பலப்படுத்தும் பணியினையும், அறந்தாங்கி நகராட்சி, அக்ரஹாரம் சாலையில்,

தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டம் (2024 – 2025) ன்கீழ், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்த தார் சாலையினை சீரமைக்கும் பணியினையும், வீரமாகாளி குளம் பகுதியில், குளம் மேம்படுத்துதல் திட்டம் (2024 – 2025) -ன்கீழ், ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணியினையும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆளப்பிறந்தான் ஊராட்சியில், ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் இப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசின் மூலம் பொதுமக்களின் நலனை மேம்படுத்திடும் வகையில் செயல்படுத்தப்படும் இத்தகைய வளர்ச்சித் திட்டப் பணிகளை அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின்போது, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, அறந்தாங்கி நகராட்சி ஆணையர் கனிராஜ், கூட்டுறவு துணைப் பதிவாளர் (அறந்தாங்கி சரகம்) எழிலரசு, வட்டாட்சியர் கருப்பையா, கூட்டுறவு சங்க சார் பதிவாளர் கருப்பசாமி, பணி மேற்பார்வையாளர் சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags : Pudukkottai district ,Collector ,Aruna ,
× RELATED விளையாட்டு அலுவலர்கள் மற்றும்...