×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாத தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான பல்வேறு தரிசனம் மற்றும் அறைகள் ஒதுக்கீடு குறித்து தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆர்ஜித சேவைகளுக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவைகளுக்கு மார்ச் மாதத்திற்கு வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். தொடர்ந்து, 20ம் தேதி காலை 10 மணி பிறகு குலுக்கலில் தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்பட்டவர்கள் வரும் 20ம் முதல் 22ம் தேதி நண்பகல் 12 மணிக்குள் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்.

அதேபோல், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவை, வருடாந்திர தெப்போற்சவம், வருடாந்திர வசந்தோற்சவம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் 22ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இதே சேவைக்கு விர்சுவல் முறையில் சுவாமி தரிசனத்திற்கு மட்டும் செல்ல வரும் 22ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அதேபோல், அங்க பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கும், வாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தி வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெற வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும்.

மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் திருமலையில் தரிசனம் செய்ய ஏதுவாக, இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் வரும் 23ம் தேதி பிற்பகல் 3 மணிக்கும், சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும்.

மேலும், திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் பெற வரும் 24ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் மற்றும் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் பெற தேவஸ்தானத்தின் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tirupati Ezhumalaiyan Temple ,Tirumala ,Devasthanam ,Tirumala Tirupati Ezhumalaiyan Temple ,Suprapadham ,Thomalai ,
× RELATED 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கடந்த ஒரு...