×

குளத்தூரில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே செயல்படுகிறது வேப்பலோடையில் கால்நடை மருத்துவமனை அமையுமா?

குளத்தூர், டிச. 15: குளத்தூரில் கால்நடை மருத்துவமனை குறிப்பிட்ட நேரம் மட்டுமே செயல்படும் நிலையில், வேப்பலோடையில் கால்நடை மருத்துவமனை திறக்க வேண்டுமென 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓட்டப்பிடாரம் யூனியனுக்குட்பட்டது, வேப்பலோடை ஊராட்சி. இந்த ஊராட்சியை சுற்றி தெற்கு கல்மேடு, வடக்கு கல்மேடு, துரைச்சாமிபுரம், வெங்கடாசலபுரம், சக்கம்மாள்புரம் என 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் விவசாயம், உப்பளத்தொழில் என இரண்டற கலந்த தொழில்கள் நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் விவசாயமும், கோடை காலத்தில் உப்பளத்தொழில்கள் செய்து வந்தாலும் இப்பகுதியில் கால்நடை வளர்ப்பு அதிகமாக உள்ளது. ஆடு, மாடு, கோழி என செல்லப்பிராணிகள் வளர்ப்பு வரை வீட்டுக்கு வீடு கால்நடை வளர்ப்பு உள்ள இப்பகுதி கிராமங்களுக்கு மையமாக வேப்பலோடை உள்ளது.

இக்கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் விளாத்திகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட 5 கிமீ தொலைவில் உள்ள குளத்தூருக்குத்தான் செல்ல வேண்டும். குளத்தூரில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்தான் கால்நடை மருத்துவமனை செயல்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள், விவசாயிகளுக்கு அலைச்சல் மன உளைச்சல் என கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சிரமமாகவே உள்ளது. இக்கிராமங்களுக்கு மையமாக உள்ள வேப்பலோடையில் கால்நடைகளுக்கு மருத்துவமனை அமைக்கப்பட்டால் இப்பகுதியில் உள்ள அனைத்து கிராமத்தினருக்கும் ஏதுவாக இருக்கும். கால்நடைகளை வெகுதூரம் சிகிச்சைக்காக அழைத்து செல்லும் சிரமமும் இருக்காது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் கூறியதாவது: வேப்பலோடையை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கால்நடை வளர்ப்பு அதிகமுள்ள நிலையில் அவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை மற்றும் பொது சிகிச்சை தேவைகளுக்கு வெகுதூரம் வாகனங்களில் கொண்டு சென்று வர வேண்டி உள்ளது. இதனால் வாகனச் செலவு, அலைச்சல் என அழுத்து போகிறது. எனவே இப்பகுதி கிராமங்களை இணைக்கும் வேப்பலோடையிலேயே ஒரு கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டால் கால்நடை வளர்ப்போரின் சிரமம் குறையும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை அதற்கான எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே கால்நடை வளர்ப்போரின் சிரமத்தை கருத்தில் கொண்டு வேப்பலோடையில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : Veppalodai ,Kulathur ,Ottapidaram ,South Kalmedu ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா