×

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதமர் மோடி ஜனவரியில் தமிழகம் வருகை? பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் கொண்டாட திட்டம்

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் பிரதமர் மோடி அடுத்த மாதம் 3 நாட்கள் பயணமாக தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் அவர் பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சியினரும் முழுவீச்சில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. ஆளுங்கட்சியான திமுகவை பொறுத்தவரை தற்போதுள்ள கூட்டணியே தொடருகிறது. மேலும் சில கட்சிகள் வரும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் பாஜ மட்டுமே இடம் பெற்றுள்ளது. வேறு எந்த கட்சியும் இதுவரை இந்த கூட்டணிக்கு வரவில்லை.

அதே நேரத்தில் அன்புமணி தலைமையிலான பாமக, தேமுதிகவை அதிமுக கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் அன்புமணி இதுவரை தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி 9ம் தேதி அறிவிப்பதாக அறிவித்து விட்டார். அவரும் அதிமுக கூட்டணிக்கு செல்வரா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் இந்த கூட்டணியில் சேர்க்கப்படுவார்களா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் பாஜ அதிக இடங்களை கேட்டு வருகிறது. இது அதிமுகவுக்கு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி அதிமுக கூட்டணியிலே இவ்வளவு பிரச்னை நீடித்து வருகிறது.

இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை மையமாக கொண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜனவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் அவர் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஜனவரி 13ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

மேலும், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனின் ’தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற சுற்றுப்பயணத்தின் நிறைவாக, புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 14ம் தேதி பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் பிரதமர் மோடி கொண்டாடவும் திட்டமிட்டுள்ளார்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி செய்யப்பட்டு, தேர்தல் பணிகள், வியூகங்கள் தொடர்பாகவும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த திட்மிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் வருவதற்குள் கூட்டணி இறுதி செய்யப்படுமா? என்பது சந்தேகம் தான்.

எப்படி இருந்தாலும் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் தமிழக பாஜ தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் கடந்த மக்களவை தேர்தலின் போது பிரதமர் மோடி 7 முறை தமிழகம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அது மட்டுமல்லாமல் அமித்ஷா, ஜே.பி.நட்டா என்று அடுத்தடுத்து பாஜ தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் வந்தனர். ஆனால், அந்த கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Modi ,Tamil Nadu ,Pongal festival ,Chennai ,Tamil ,Nadu assembly elections ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...