- சிம்ஸ் பார்க்
- குன்னூர்
- தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை
- சிம்ஸ்பார்க், குன்னூர், நீலகிரி மாவட்டம்
- பார்லியார்
குன்னூர், டிச.13: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையின் பழப் பண்ணை உள்ளது. மேலும் சிம்ஸ் பூங்கா மற்றும் பர்லியார் அருகே உள்ள பழப் பண்ணைகளில் விளையும் பழங்கள் ஜாதிக்காய், நெல்லிக்காய் கொண்டு ஜாம், மிக்சட் புருட், ஜெல்லி, ஊறுகாய் போன்றவற்றை தயார் செய்து சுற்றுலா பயணிகளிடம் ஊழியர்கள் நேரடி விற்பனை செய்து வருகின்றனர். தற்போது சமவெளி பகுதிகளில் விளைந்த அன்னாசி, வாழை மற்றும் பப்பாளி போன்ற 3 டன் அளவிலான பழ வகைகளை கலவையாக கொண்டு இயற்கை முறையில் ஜாம் தயார் செய்யும் பணிகளில் தோட்டக்கலை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தோட்டகலை துறை சார்பில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் தமிழக அரசு நேரடியாக விற்பனை செய்து வருவதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
குறிப்பாக ஜாம், ஜீஸ், ஊறுகாய்கள் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களான காட்டேரி, பர்லியார், கல்லார், கோவை செம்மொழி பூங்கா, கொடைக்கானல் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அதனைத் தொடர்ந்து புத்தாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு தோட்டக்கலை துறையில் தயாரிக்கப்படும் ஜாமுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வாங்கி செல்ல வாய்ப்புள்ளதால் சுமார் 3,000க்கும் மேற்பட்ட பாட்டில்களில் அடைத்து வைத்து விற்பனை செய்வதற்காக இப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
