×

கடை சுவரில் துளையிட்டு செல்போன்கள் திருட்டு செய்யாறு அருகே துணிகரம்

செய்யாறு, டிச. 13: செய்யாறு அருகே கடையின் சுவரை துளையிட்டு செல்போன்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அசனமாபேட்டை கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன்(35). இவர் அசனமாபேட்டை எம்ஜிஆர் நகரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 8ம்தேதி மாலை வழக்கம்போல் கடையை பூட்டிக்கொண்டு சென்றார். மறுநாள் காலை கடையை திறந்து உள்ளே சென்றபோது கடையில் பொருட்கள் சிதறிக்கிடந்தது. பின்பக்க சுவரில் துளை போடப்பட்டிருந்தது. கடையில் இருந்த 4 செல்போன்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1.5 லட்சம்.
இதுகுறித்து பரந்தாமன், மோரணம் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கடையின் சுவரில் சிறிய அளவில் துளையிட்டு இருப்பதால், செல்போன்களை திருடிய மர்ம ஆசாமிகள், சிறுவர்களை பயன்படுத்தி சுவரை துளையிட்டு செல்போன்களை திருடிச்சென்றிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன்களை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags : Cheyyar ,Paranthaman ,Asanampettai Kootrodu ,Vembakkam taluka ,Tiruvannamalai district ,Asanampettai MGR ,Nagar… ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...