- பார்வதமலை
- இறைவன்
- மாசி
- கலசபாக்கம்
- பிரம்மராம்பிகை அம்மன் மல்லிகா அர்ஜுனேஸ்வரர்
- தென்மகாதேவமங்கலம்
- திருவண்ணாமலை
கலசபாக்கம், மார்ச்3: திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை அம்மன் மல்லிகா அர்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பவுர்ணமி, அமாவாசை பிரதோஷம் விசேஷ தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும். தற்போது இந்த நிலை மாறி பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படிக்கட்டுகள், பாறைகள், கரடு முரடான பாதைகள், ஏணிப்படி ஆகாயப்படி என பல்வேறு பாதைகளை கடந்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 7ம் தேதி முதல் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் 18 வயது முதல் 60 வயது வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கர்ப்பிணிகள், நடக்க இயலாத நிலையில் உள்ள மாற்று திறனாளிகள், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், சுவாச பிரச்னை உள்ளவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் கொண்டவர்களை மலையேற அனுமதிப்பது கிடையாது.
இந்நிலையில் நேற்று மாசி மாத பவுர்ணமி நேற்று மாலை 6.29 மணிக்கு தொடங்கி இன்று மாலை 5.22 மணிக்கு நிறைவடைகிறது. நடைமுறை விதிகளின்படி நேற்று பிற்பகல் 1 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கவில்லை இன்று அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நேற்று காலை முதலே பக்தர்கள் திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஆனால் நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்தில் காத்திருந்தனர். விடிய விடிய தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் வேதனை அடைந்தனர். விசேஷ தினங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் மலையேறும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் பக்தர்கள் சிலர் நேற்று மாலை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் மற்றும் வனத்துறையினர் அதிகாலை 5 மணிக்கு பிறகுதான் அனுமதி வழங்கப்படும் எனக்கூறி, பக்தர்கள் மலையேற அனுமதிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
