செய்யாறு, மார்ச் 3: செய்யாறில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.13.70 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைலான போதைப் பொருட்களை போலீசார் நேற்று ஆற்றில் குழி தோண்டி புதைத்து அழித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் உட்கோட்டத்திற்குபட்ட செய்யாறு, மோரணம், அனக்காவூர், தூசி. பிரம்மதேசம், பெரணமல்லுார் ஆகிய காவல் சரகப் பகுதிகளில் அரசால் தடைச் செய்யப்பட்ட 540.176 கிலோ எடையுள்ள புகையிலை போதை பொருள் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து 84 வழக்குகள் பதிவு செய்தனர். மேற்படி வழக்குகளில் 54 வழக்குகள் முடிவுற்ற நிலையில், செய்யாறு நீதிமன்ற தீர்ப்பின் படி நீதிபதி உத்தரவின் பேரில், சுமார் ரூ.13.70 லட்சம் மதிப்பிலான தடைச் செய்யப்பட்ட 540.176 கிலோ எடையுள்ள புகையிலைலான போதைப் பொருட்களை செய்யாறு ஆற்றுப் பகுதியில் செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி, மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, தலைமையில் சப் – இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், ராமகிருஷ்ணன், தனிப்பிரிவு போலீசார் முருகன் மற்றும் நீதிமன்ற காவலர்கள் முன்னிலையில் கிரேன் மூலம் சுமார் 10 அடி பள்ளத்தில் தடைச் செய்யப்பட்ட புகையிலையிலான போதைப் பொருட்களை பிரித்துக்கொட்டி அதன் மீது குப்பைகளை வீசி வீடியோப் பதிவு செய்த நிலையில் மண்ணை மூடி அழித்தனர்.
