- திருவண்ணாமலை நீதிமன்றம்
- செய்யாறு
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை நீதிமன்றம்
- முனுசாமி
- பெரிய செங்காடு
- செய்யாறு தாலுகா
திருவண்ணாமலை, பிப்.27: செய்யாறு அருகே விவசாயியை அடித்து கொலை செய்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பெரிய செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (40), விவசாயி. இவரது உறவினர் இருசப்பன் (51). இருவருக்கும் இடையே நில பாகப்பிரிவினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 15.5.2014 அன்று பெரிய செங்காடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே சென்றுகொண்டிருந்த முனிசாமியிடம், இருசப்பன் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது இருசப்பனுக்கு ஆதரவாக, அவரது தம்பி பெருமாள் (45) மற்றும் உறவினர்களான முன்னாள் எம்எல்ஏ ஜெயராமன் என்பவரது மகன்கள் மதியழகன் (35) நந்தகோபால் (28), சுதாகர் (32), துரைமுருகன் (30), முன்னாள் எம்எல்ஏவான கமலக்கண்ணன் (37) ஆகியோர் சரமாரியாக முனுசாமியை கத்தியால் தாக்கினர். மேலும், தடுக்க வந்த அவரது மனைவி பொன்னியையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முனுசாமி மற்றும் அவரது மனைவி பொன்னி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, சிகிச்சை பலனின்றி முனுசாமி இறந்தார். அதைத்தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட முனுசாமியின் மனைவி பொன்னி, அனக்காவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மதியழகன், நந்தகோபால், இருசப்பன், பெருமாள், சுதாகர், கமலக்கண்ணன், துரைமுருகன் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி மதுசூதனன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், விவசாயியை அடித்து கொலை செய்த முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் மற்றும் அவரது சகோதரர்கள் மதியழகன், நந்தகோபால், சுதாகர், துரைமுருகன் மற்றும் உறவினர்கள் இருசப்பன் பெருமாள் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 7 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, கமலக்கண்ணனின் தந்தை ஜெயராமன் வந்தவாசி தொகுதி எம்எல்ஏவாக 2006ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பட்டார். பதவி காலத்தில் அவர் உயிரிழந்ததால், 2009ல் நடந்த இடைத்தேர்தலில் அவரது மகன் கமலக்கண்ணன் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்று 2009- 2011 வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
