×

சத்தியமங்கலம் அருகே லாரியை மறித்து மக்காச்சோளத்தை பறித்து தின்ற காட்டு யானை

சத்தியமங்கலம், டிச.12: சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்த காட்டு யானை மக்காச்சோளம் மூட்டைகளில் இருந்து மக்காச்சோளத்தை பறித்து சாப்பிட்டால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரிகின்றன.

இந்நிலையில் நேற்று திம்பம் மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மக்காச்சோள பாரம் ஏற்றிய லாரி வனப்பகுதி வழியாக வந்தது. அப்போது ஒரு காட்டு யானை திடீரென சாலையில் லாரியை வழிமறித்ததால் ஓட்டுநர் லாரியை நிறுத்தினார். அருகே வந்த காட்டு யானை லாரியில் இருந்த மக்காச்சோளம் மூட்டைகளை அடித்து கிழித்து மக்காச்சோளத்தை பறித்து தின்றபடி வாகனத்தை வழிமறித்து நின்றது. இதனை கண்ட மற்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மக்காச்சோளத்தை தின்ற பின் பின்னர் மெதுவாக சாலை ஓர வனப்பகுதிக்குள் யானை சென்று மறைந்தது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. காட்டு யானை லாரியை வழிமறித்ததால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் அச்சமடைந்தனர்.

Tags : Sathyamangalam ,Sathyamangalam Tiger Reserve forest ,Erode district ,
× RELATED மாவட்டத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு