டெல்லி: ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை தர முடியாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய மக்களின் அடையாள ஆவணமான ஆதார் கார்டு, வங்கி பரிவர்த்தனைகள் முதல் பல்வேறு சேவைகளுக்கு அவசியமான ஆவணமாக இருந்து வருகிறது. ஆதார் அட்டையில், ஒவ்வொருவருக்குமான தனி எண் தரப்பட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் புகைப்படம், பிறந்த தேதி மற்றும் ஆண்டு, முகவரி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.
இதுவரை ஆதார் கார்டில் பெயர் மாற்றத்துக்கான ஆதார ஆவணமாக பான் கார்டு ஏற்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் ‘யுதய்’ புதிதாக வெளியிட்டுள்ள ஆவணப்பட்டியலில் பான் கார்டு நீக்கப்பட்டுள்ளது. அதாவது இனி ஆதார் பெயர் மாற்றத்திற்காக பான் கார்டை சமர்ப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, லைசென்ஸ் ஆகியற்றை ஆதார் பெயர் மாற்ற ஆவணமாக இணைக்கலாம் என்று யுதய் அறிவித்துள்ளது. மேலும் புகைப்படத்துடன் கூடிய சாதிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் இணைக்கலாம் எனவும் ‘யுதய்’ குறிப்பிட்டுள்ளது.
