திருவாரூர், டிச.11: திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் கீழ் வேளாண் இயந்திரங்கள் ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை கருவிகள் பணிமனையில் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் மூலம் இளைஞர்களுக்கு வேளாண் இயந்திரங்கள் குறித்த செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி மூலம் டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம், மற்றும் ட்ரோன் உட்பட அனைத்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் பயிற்சி அளிக்கப்படும். மேலும் இப்பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள டிராக்டரின் வெட்டு தோற்ற மாதிரி மூலம் டிராக்டர் இயங்கும் முறைகள் மற்றும் பழுது நிவர்த்தி செய்யும் முறைகள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் 16 நாட்கள் (128 மணி நேரம்) தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்டு நிறைவு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் http://candidate.tnskill.tn.gov.in
என்ற இணையதள முகவரியில் தேவையான விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம். வேளாண் பொறியியல் துறையில் வேளாண் கருவிகள் பணிமனை அலுவலகத்திற்கு நேரில் சென்று அல்லது உதவி செயற்பொறியாளர் 6383426912, உதவிப்பொறியாளர் -7904283434, 9952877189 ஆகிய தொடர்பு எண்களை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
