திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டது தொடர்பான தீர்ப்பு விவரங்கள் முன்கூட்டியே வெளியானதாக கூறி கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 8 வருடங்களுக்குப் பின் கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஏ 1 முதல் ஏ 6 வரை உள்ள 6 பேர் குற்றவாளிகள் என்று எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவர்களுக்கான தண்டனை நாளை (12ம் தேதி) அறிவிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் 8வது நபராக சேர்க்கப்பட்டிருந்த நடிகர் திலீப் உள்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு விவரங்கள் முன்கூட்டியே வெளியானதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் யஷ்வந்த் ஷெனாய் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பது:
நடிகை பலாத்கார வழக்கில் தீர்ப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வக்கீல்கள் சங்கத்திற்கு ஒரு மொட்டை கடிதம் வந்தது. தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு விவரங்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. திலீப் உள்பட 4 பேரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே தீர்ப்பு விவரங்கள் முன்கூட்டியே வெளியானதாக சந்தேகம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
