நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி 2 இடங்களில் வாக்களித்தது எப்படி..? தேர்தல் ஆணையம் பதில் கூற இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

திருவனந்தபுரம்: ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்திலும், உள்ளாட்சித் தேர்தலில் வேறு ஒரு இடத்திலும் வாக்களித்தது எப்படி என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதில் கூற வேண்டும் என்று கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஒன்றிய இணையமைச்சரும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சுரேஷ் கோபியின் சொந்த ஊர் திருவனந்தபுரம் ஆகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை எல்லா தேர்தலிலும் அவர் திருவனந்தபுரத்தில் தான் வாக்களித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பு அவர் தன்னுடைய முகவரியை திருச்சூருக்கு மாற்றினார். பின்பு அங்குள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் குடும்பத்துடன் திருச்சூரில் வாக்களித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சுரேஷ் கோபி குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் ஓட்டு போட்டார்.

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுனில்குமார் கூறியது: கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சுரேஷ் கோபியும், குடும்பமும் திருச்சூரில் வசிப்பதாக கூறி அங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து ஓட்டு போட்டார்கள். ஆனால் இப்போது உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரத்தில் இவர்கள் ஓட்டு போட்டுள்ளனர். இது எப்படி சாத்தியமாகும் என்பது புரியவில்லை. இதுதொடர்பாக சுரேஷ் கோபியும், தேர்தல் ஆணையமும் பதில் கூறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: