புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.19 வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஜெர்மனி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ராகுலின் இந்தப் பயணம் குறித்து பேசிய பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவாலா கூறியதாவது: ராகுல் மீண்டும் ஒருமுறை தன்னை சுற்றுலாவுக்கான தலைவர் என்பதை நிருபித்து விட்டார். மக்கள் உழைக்கும் நோக்கத்தில் இருக்கும் வேளையில், ராகுல் எப்போதும் சுற்றுலா செல்லும் எண்ணத்திலேயே இருந்து வருகிறார். பீகார் தேர்தலின் போது எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த வேளையில், ராகுல் மட்டும் வனத்தில் சபாரி சென்றிருந்தார். இவ்வாறு கூறினார்.
பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் துஹின் சின்ஹா கூறுகையில்,’ ராகுல்காந்தியின் வெளிநாடு பயணம் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்படுவது இல்லை. அவர் நாட்டு மக்களிடம் இருந்து என்ன மறைக்கிறார்?. சுற்றுலாத் தலைவர் அடுத்த வாரம் ஜெர்மனிக்கு 6 நாள் பயணம் செல்ல உள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், 13 முக்கியமான மசோதாக்கள் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், இதை விட அவரது ரகசிய பயணங்கள் அவருக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவதற்கு என்ன காரணம்?
மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல்காந்தி, இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் இங்கு இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு முக்கியமான சந்தர்ப்பத்திலும் காணாமல் போவது அவரது வழக்கமாகிவிட்டது. இந்தியாவில் தனது பொறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தெரியாத இடங்களில் (வெளிநாடுகளில்) தெரியாதவர்களை அவர் தொடர்ந்து சந்தித்து வருகிறார். அதற்கு முன்பு தென் அமெரிக்காவுக்குச் சென்றபோது, அங்கு அவரது செயல்பாடுகள் குறித்து எந்த தகவலும் இல்லை. தென் அமெரிக்க பயணத்தின் போது, இந்திரா காந்தி அமைதிப் பரிசைப் பெறும்படி சிலியின் முன்னாள் ஜனாதிபதி மிஷேல் பச்லெட்டைச் சந்தித்தாரா? அவர் இந்தியாவில் அரசியலில் ஆர்வமாக உள்ளாரா இல்லையா என்பதை அவரது கட்சி முடிவு செய்ய வேண்டும். ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்துக்கொண்டு தொடர்ந்து நாட்டைத் தாக்கிப்பேசும் யோசனையை அவர் எங்கிருந்து சேகரிக்கிறார் என்பதை அவர் விளக்க வேண்டும். அவர் வரம்பை மீறினால், அவர் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு அமைப்புகள் கண்காணிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’என்றார்.
மோடி பாதிநாள் வெளிநாட்டில் தானே இருக்கிறார்: பிரியங்கா
ராகுல்காந்தியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரியங்கா கூறும்போது, ‘பிரதமர் மோடி தனது வேலை நேரத்தில் கிட்டத்தட்ட பாதியை நாட்டிற்கு வெளியே செலவிடுகிறார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் பயணம் செய்வது குறித்து அவர்கள் ஏன் கேள்விகளை எழுப்புகிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.
