புதுடெல்லி: புதிய தகவல் ஆணையர் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது ஒன்றிய அரசு வழங்கிய பட்டியலை நிராகரித்தார். மத்திய தகவல் ஆணையத்தில் தலைவர் பதவியுடன் சேர்த்து மொத்தம் 10 பணியிடங்கள் உள்ளன. தற்போது இரண்டு தகவல் ஆணையர்கள் ஆனந்தி ராமலிங்கம் மற்றும் வினோத் குமார் திவாரி மட்டுமே உள்ளனர். செப்.13 அன்று தலைமை தகவல் ஆணையர் ஹீராலால் சமாரியா பதவி விலகி பிறகு புதிய தலைவர் நியமனம் செய்யப்படவில்லை.
உறுப்பினர்களும் நியமிக்கப்படவில்லை. மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள 8 பதவிகளுக்கும், அடுத்த தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்யவும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகிய 3 பேர் கொண்ட குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தினார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மதியம் 1 மணி அளவில் பிரதமர் அலுவலகத்திற்கு சென்றார். அவரை தொடர்ந்து ராகுல்காந்தியும் அங்கு சென்றார். சுமார் மதியம் 1.07 மணிக்கு ஆலோசனை தொடங்கியது. ஒன்றரை மணி நேரம், அதாவது சரியாக 88 நிமிடங்கள் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமித்ஷாவும், ராகுல்காந்தியும் பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேறினார்கள்.
இந்த ஒன்றரை மணி நேர ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய அரசு கொடுத்த அத்தனை பெயர்களையும் ராகுல்காந்தி நிராகரித்தார். மேலும் தனது கருத்து வேறுபாடு குறிப்பையும் பிரதமர் மோடி, அமித்ஷாவிlம் சமர்ப்பித்தார். புதிய தேர்வு குறித்து ஒன்றிய அரசு தயாரித்த பட்டியலில் ஒரு பெயரைக்கூட ராகுல்காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர் நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் 88 நிமிடம் நடந்த ஆலோசனை நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
தகவல் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12(3)-ன் கீழ், பிரதமர் தேர்வுக் குழுவின் தலைவராக உள்ளார், இதில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சர் ஆகியோர் தேர்வு குழுவில் இடம் பெறுவார்கள். அவர்கள் ஆலோசனை நடத்தி தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களின் நியமனத்திற்கான பெயர்களைத் தேர்ந்தெடுத்து பரிந்துரைக்கின்றனர்.
