புதுடெல்லி: டிசம்பர் இறுதியில் நடைபெற இருந்த எச்1பி விசா நேர்காணல் இந்தியா முழுவதும் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி முதல் இதுவரை 85 ஆயிரம் விசாக்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், அமெரிக்காவில் தங்கியுள்ள 5.5 கோடி வெளிநாட்டினரைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையிலான புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வரும் 15ம் தேதி முதல் எச்-1பி விசா விண்ணப்பதாரர்கள் தங்கள் சமூக வலைதளக் கணக்குகளை அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் பொதுவெளியில் வைத்திருக்க வேண்டும் எனவும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருந்த ஆயிரக்கணக்கான எச்1பி விசா விண்ணப்பதாரர்களின் நேர்காணல்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களின் சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் ஆன்லைன் சுயவிவரங்களை ஆராய்வதற்காக நேர்காணல்கள் பலமாதங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அடுத்த வாரம் நேர்காணல் இருந்த சில விண்ணப்பதாரர்களுக்கு, அமெரிக்க குடிவரவு அதிகாரிகளிடமிருந்து மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அதில் அவர்களின் நேர்காணல்கள் அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா வந்துள்ள அமெரிக்கா வாழ் இந்தியர்கள் குறிப்பிட்ட காலத்தில் அமெரிக்கா செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் ேவலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
