குமரியில் 4 இடங்களில் முகாம் தொடங்கியது கொரோனா தடுப்பூசி போட சுகாதார பணியாளர்கள் தயக்கம் பதிவு செய்த 400 பேரில் 55 பேர் மட்டுமே முன்வந்தனர்

நாகர்கோவில், ஜன.17 : குமரியில் கொரோனா தடுப்பூசி போட  சுகாதார பணியாளர்கள் ஆர்வம் காட்ட வில்லை. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி தடுப்பூசி போடும் பணி நேற்று (16ம் தேதி) நாடு முழுவதும் தொடங்கியது. முதற்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் செண்பகராமன்புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் தடுப்பூசிக்கான முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 10.50க்கு தடுப்பூசி போடும் பணியை, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரகலாதன் உள்ளிட்டோர் கலந்து ெகாண்டனர்.

முதல் தடுப்பூசியை, மருத்துவமனை உறைவிட மருத்துவர் டாக்டர் ஆறுமுகவேலன் போட்டுக் கொண்டார். தொடர்ந்து டாக்டர்கள் செல்வம், பிரின்ஸ் பயஸ் உள்ளிட்டோர் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

இதே போல் குழித்துறை அரசு மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை, செண்பகராமன்புதூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. ஒரு மையத்தில் 100 பேர் வீதம், ஒரு நாளைக்கு 400 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இடையே ஆர்வம் குறைவாக இருந்தது. பெயர்களை பதிவு செய்தவர்கள் ஊசி போட்டுக் கொள்ள முன் வர வில்லை.  நேற்று  55 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. இதில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 34 பேர் தடுப்பூசி போட்டனர்.  இதில் 33 பேர் டாக்டர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 11 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில்  6  பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். குழித்துறை அரசு மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 55 பேர் மட்டும் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இது குறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், சுய விருப்பத்தின் பேரில் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. யாரையும் கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. முதல் நாள் என்பதால் தயக்கம் இருக்கலாம். நாட்கள் செல்ல, செல்ல ஆர்வத்துடன் வருவார்கள் என்றனர்.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள பெயர்களின் அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கான நாள், நேரம், இடம் குறிக்கப்பட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி மருத்துவக்கல்லூரியில் 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று டாக்டர்கள் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டினர். டீன் சுகந்தி ராஜகுமாரி உள்ளிட்டோர் பெயர்களை பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு 20ம்தேதி தடுப்பூசி போடப்படுகிறது.

எலக்ட்ரீசியன் ஆர்வம்

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில், நேற்று காலை 11 மணிக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஆனால் டாக்டர்கள், பணியாளர்கள் வர வில்லை. அந்த சமயத்தில் எலக்ட்ரீசியன் ஒருவர் தானாக முன் வந்து, ஊசி போட்டுக் கொள்ள வந்தார். அவரது பெயரை கோவின் செயலியின் பதிவேற்றம் செய்தனர். பின்னர் அங்கிருந்து எஸ்.எம்.எஸ். வந்ததும், அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மற்றவர்கள் தயக்கம் காட்ட, எலக்ட்ரீசியன் தானாக முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டதை பலரும் பாராட்டினர்.

Related Stories:

>