டோக்கியோ: ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி தாக்கியது. ஜப்பான் நாட்டின் அமோரி மற்றும் ஹொக்கைடோ கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக ஜப்பானின் முக்கிய ஹோன்ஷு தீவின் வடக்குப் பகுதியான அமோரிக்கு கிழக்கேயும், ஹொக்கைடோ தீவின் தெற்கேயும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. உடனே நாட்டு மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சுமார் 10 அடி உயரம் வரை அலைகள் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது.
அதே போல் சிறிது நேரத்தில் ஹொக்கைடோ மாகாண நகரமான உரகாவா மற்றும் முட்சு ஒகவாராவின் அமோரி மாகாண துறைமுகத்தையும் 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கின. இதில் ஹச்சினோஹேயின் அமோரி நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பலர் காயமடைந்தனர். மேலும் ஏராளமான சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சுனாமி சேதம், நிலநடுக்க பாதிப்பு பற்றி அறிய ஜப்பான் பிரதமர் சனே தகாயிச்சி அவசர குழுவை நியமித்துள்ளார். மேலும் அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.
