×

திருமண வயதை எட்டாவிட்டாலும் லிவ்- இன் உறவில் இருக்க வயது வந்தவர்களுக்கு உரிமை உண்டு: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை சேர்ந்த 18 வயது பெண்ணும்,19 வயது வாலிபரும் திருமணம் ஆகாமல் லிவ்- இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். கடந்த அக்டோபர் 27ம் தேதி இது தொடர்பாக இருவரும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.லிவ் இன் உறவுக்கு இளம் பெண்ணின் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த பெண்ணையும் வாலிபரையும் கொன்று விடுவதாக குடும்பத்தினர் மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக கோட்டா போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி இளம்பெண், வாலிபர் இருவரும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி அனுப் தண்ட் முன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் விவேக் சவுத்ரி,‘‘ குறிப்பிட்ட ஆணுக்கு 19 வயது. ஆண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச சட்டபூர்வ வயதான 21-ஐ எட்டவில்லை. இதனால் அவரை லிவ் இன் உறவில் இருக்க அனுமதிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதி,மனுதாரர் திருமண வயதை எட்டவில்லை என்பதற்காக அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் வாழ்க்கை உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை மறுக்க முடியாது. ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க அரசுக்கு அரசியலமைப்பு கடமை உள்ளது. இந்திய சட்டத்தின் கீழ் லிவ் இன் உறவுகள் தடைசெய்யப்படவில்லை அல்லது குற்றமாக்கப்படவில்லை என்று தீர்ப்பளித்தார்.

Tags : Rajasthan High Court ,Jaipur ,Rajasthan ,
× RELATED உலக நாடுகள் இந்தியாவில் முதலீடுகள்...