×

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்; தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

 

புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகேயுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து முன்னணியினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியிருந்தார். மேற்கண்ட உத்தரவுக்கு எதிராகவும்,, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்ற நடைமுறை இல்லாததால் புதிய வழக்கத்தை செயல்படுத்த முடியாது எனக் கூறி கோயில் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. அதேபோல், தமிழ்நாடு அரசும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தது.

இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் கலவரத்தில் ஈடுபட்டு பேரிகார்டுகளை சேதப்படுத்தி, காவலர்களை தாக்கிய விவகாரத்தில், 13 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் எங்களது கோரிக்கையை உயர்நீதிமன்றம் சரியான முறையில் கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஷ் சுப்பிரமணியன் நேற்று ஒரு முறையீட்டை முன் வைத்தார் அதில் திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏனெனில் இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளடங்கியுள்ளது என்று தெரிவித்தார். இதை அடுத்து தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் பட்டியலிட்டு இரு தினங்களில் விசாரணை மேற்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

Tags : Thiruparankundram pillar ,Supreme Court ,Tamil Nadu government ,New Delhi ,Munnani ,Sikandar Dargah ,Thiruparankundram hill ,Justice ,G.R. Swaminathan ,CISF ,
× RELATED உலக நாடுகள் இந்தியாவில் முதலீடுகள்...