×

தூய்மை பணியாளர்களுக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு 250 டன் குப்பை கழிவுகளை அகற்றிய

திருவண்ணாமலை, டிச.6: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தூய்மைப்பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடந்து முடிந்தது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 ஆயிரம் தூய்மைப்பணியாளர்கள் இரவு பகலாக திருவண்ணாமலை நகரையும், கிரிவலப்பாதையும் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். தீபத்திருவிழா மற்றும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலைக்கு வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வீசிச்சென்ற சுமார் 250 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டது. எனவே, தூய்மைப்பணியாளர்களின் அயராத உழைப்பு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு, அவர்களின் பணி இடத்துக்கு நேரில் சென்று கலெக்டர் தர்ப்பகராஜ் நன்றி தெரிவித்தார். மேலும், அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். அதன்படி, தூய்மைப்பணியாளர்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் டிஆர்ஓ ராம்பிரதீபன் நேற்று அழைத்துச் சென்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். அதனால், தூய்மைப்பணியாளர்கள் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்தனர். மேலும், கோயில் நிர்வாகத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : Annamalaiyar temple ,Tiruvannamalai ,Karthigai Deepathi festival ,
× RELATED கணவருடன் வாழ்ந்து வரும் எனது காதலியை...