ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கிறது; திருச்சியில் உள்ள பிரபல திரையரங்கில் சதி திட்டம் தீட்டப்பட்டதா?: உரிமையாளர், பணியாளர்களிடம் டிஐஜி 5 மணி நேரம் விசாரணை

திருச்சி: திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக பிரபல திரையரங்கில் அதன் உரிமையாளர், பணியாளர்களிடம் டிஐஜி வருண் குமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவின் முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29ம் தேதி திருச்சியில் கொலை செய்யப்பட்டார். கொலை நடந்து 13 ஆண்டுகளாகிறது. இது தொடர்பாக சிபிசிஐடி, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் விசாரித்தும் வழக்கில் துப்பு துலங்கவில்லை. குற்றவாளிகளும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்த நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி தூத்துக்குடி எஸ்பியாக இருந்த ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. ஆனாலும் வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் மாற்றப்பட்டு அப்போதைய திருச்சி சரக டிஐஜி வருண்குமார், தஞ்சை எஸ்.பி ராஜாராம் ஆகியோரை விசாரணை அதிகாரிகளாக ஐகோர்ட் நியமித்தது. தொடர்ந்து விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் டிஐஜி வருண்குமார் தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு முன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று அங்கு அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதி சுடலைமுத்துவிடம் விசாரித்தனர். சுடலைமுத்து, திருநெல்வேலி சிப்காட் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டவர். ராமஜெயம் கொலை செய்யப்பட்ட காலக்கட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் தொழிற்பயிற்சிக்காக வந்திருந்தார். அப்போது ராமஜெயம் கொலை தொடர்பாக மற்றொரு கைதியுடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இந்த முக்கிய தகவலின்பேரில் டிஐஜி வருண்குமார் தலைமையிலான போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று, சுடலைமுத்துவிடம் 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் திருச்சி, நெல்லை, மதுரை, சென்னை புழல் உள்ளிட்ட மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண்குமார் தற்போது சிபிசிஐடி டிஐஜியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை திருச்சி பாலக்கரையில் உள்ள பிரபல தியேட்டருக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அங்கு தியேட்டரின் உரிமையாளர் மற்றும் தியேட்டரில் பணியாற்றும் ஊழியர்களிடம் டிஐஜி வருண்குமார் விசாரணை நடத்தினார். ராமஜெயம் கொலை தொடர்பாக இந்த தியேட்டரில் சதி திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. 5 மணி நேர விசாரணைக்கு பின், டிஐஜி மற்றும் குழுவினர் அங்கிருந்து கிளம்பி சென்றனர். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திரையரங்கில் விசாரணை நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: