2வது ஒரு நாள் போட்டி: தென் ஆப்ரிக்கா வெற்றி

ராய்ப்பூர்: இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றிபெற்றது. இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் இடையே, 2வது ஒரு நாள் போட்டி ராய்ப்பூரில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 14, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்னில் ஆட்டமிழந்தனர். அதன் பின் இணை சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, ருதுராஜ் கெய்க்வாட் அட்டகாசமாக ஆடி ரன்களை குவித்தனர்.

இந்த இணை, 3வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் விளாசியிருந்த நிலையில், ருதுராஜ் 105 ரன்னில் (83 பந்து, 2 சிக்சர், 12 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அற்புதமாக சதம் விளாசிய கோஹ்லி 93 பந்தில் 102 ரன் குவித்து அவுட்டானார். பின் வந்த கேப்டன் கே.எல்.ராகுல் அவுட்டாகாமல் 43 பந்தில் 66 ரன் குவித்தார். 50 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 358 எடுத்தது. அதையடுத்து, 359 ரன் இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. துவக்க வீரர் குவின்டன் டிகாக் 8 ரன்னில் அவுட்டானார். அய்டன் மார்க்ரம் 110 ரன், கேப்டன் டெம்பா பவுமா 46, டெவால்ட் புரூவிஸ் 54, மேத்யூ பிரீட்ஸ்கி 68 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 49.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது. இதனால், 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றிபெற்றது.

மீண்டும் ஒரு சதம், கோஹ்லி தனி ரகம்:தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் துவக்கம் முதல் அனல் பறக்க பந்துகளை தெறிக்க விட்ட நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 90 பந்துகளில் சதமடித்தார். முதல் போட்டியில் 135 ரன் குவித்திருந்த கோஹ்லி, நேற்றைய போட்டியில் 93 பந்துகளில் 2 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 102 ரன் வெளுத்து ஆட்டமிழந்தார். ஒரு நாள் போட்டிகளில், இது, கோஹ்லியின் 53வது சதம். இதற்கிடையே, முதல் போட்டிக்கு பின்னர் வெளியான, ஐசிசி ஒரு நாள் பேட்டிங் தர வரிசைப் பட்டியலில் விராட் கோஹ்லி, 751 புள்ளிகளுடன், ஒரு நிலை உயர்ந்து 4ம் இடத்தை பிடித்தார். 4ம் இடத்தில் இருந்த சுப்மன் கில், 5ம் இடத்துக்கு சரிந்தார். இப்பட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா 783 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 766 புள்ளிகள் பெற்று 2ம் இடத்திலும், ஆப்கன் வீரர் இப்ராகிம் ஜாட்ரன் 764 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.

Related Stories: