×

பெரு வெள்ள பாதிப்பு மறக்க முடியுமா 2015 டிச.1ஐ: தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தப்பும் சென்னை; அசுர வேகத்தில் வெள்ள நீர் அகற்றும் பணி

சென்னை: சென்னையில் 100 ஆண்டுகள் கண்டிராத மழை வெள்ளத்தை 2015ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு காண்பித்தது. 2015ல் சென்னை வெள்ளம் என்பது நவம்பர் மற்றும் டிசம்பரில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட ஒரு பெரிய பேரழிவாகவே இன்றுவரை பார்க்கப்படுகிறது. இந்த வெள்ளப்பெருக்கு 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமானதாகவும், மனித தவறுகள் மற்றும் மோசமான நீர்வள மேலாண்மையும் முக்கிய காரணங்களாக அமைந்ததாகவும் இந்திய கணக்காய்வு அறிக்கை கூறியது. இதனால் பலத்த உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டது. பல அடி உயரத்துக்கு வெள்ள நீர் பெருகியதால் சென்னையே மிதந்தது.

மக்கள் மனதில் நீங்காத அச்ச உணர்வை தந்ததால் கடந்த 10 ஆண்டுகளாகவே சென்னையில் வானம் லேசாகத் தூறினாலே, ‘அய்யோ.. 2015 மாதிரி ஆயிடுமோ’ என்ற பதைபதைப்பு மக்கள் மத்தியில் எழுவது இயல்பாகிவிட்டது என்றே சொல்லலாம். ஆனால், இது இயற்கையால் விளைந்த ஆபத்து அல்ல, அப்போதைய அதிமுக அரசின் அலட்சியம் என்றும், குறிப்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அலட்சியம் காரணமாக இப்படிப்பட்ட பேரழிவை சென்னை மக்கள் சந்தித்தனர் என்றும், அவர் உரிய நேரத்தில் உத்தரவிடாததால் செம்பரம்பாக்கம் ஏரியை தாமதமாக திறந்து விட்டார்கள். அதனால் தான் வெள்ளம் ஏற்பட்டது” என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது.

அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2015ம் ஆண்டு டிசம்பர் 1ம்தேதி திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் ஏற்படுத்திய பாதிப்பில் பலர் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, உணவு இல்லாமல் தவித்தது இன்னமும் நம் கண் முன்னால் வந்து செல்கிறது. இந்த சம்பவம் சென்னையின் வரலாற்றில் அழிக்க முடியாத மறக்க முடியாத மிகப்பெரிய பேரழிவு 2015 பெருவெள்ளம். அதுவும் டிசம்பர் மாதம் வந்தாலே தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு எச்சரிக்கை அலாரம் அடிக்க தொடங்கிவிடுவது போன்று மழையின் பாதிப்பும் வந்து விடுகிறது.

அந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 2ம்தேதி வரை ஒரே நேரத்தில் தொடர் மழை கொட்டித் தீர்த்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 29 செ.மீ மழையும், விமான நிலையத்தில் 34.5 செமீ மழையும் பதிவானது. இதன் காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி முன் எச்சரிக்கை இன்றி நீர் திறக்கப்பட்டதால் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் நீரில் மூழ்கின. வீடுகள், கட்டிடங்களின் தரைத்தளங்கள் மட்டுமின்றி அடையாறு, சைதாப்பேட்டை பாலங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ள நீர்மட்டம் அதிகரித்தது.

பல கட்டிடங்களில் 2, 3 வது தளம் வரை தண்ணீர் மட்டம் உயர்ந்தது. கூவம் ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். வணிக நிறுவனங்கள், அலுவலகங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் இழுத்து மூடப்பட்டன. மின்சாரம், தொலை தொடர்பு சேவைகள், இணையதள இணைப்பு போன்றவை சுமார் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை பாதிக்கப்பட்டன. 10 நாட்களுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னையில் ரயில் சேவைகள் டிசம்பர் 1ம்தேதி முதல் 7ம்தேதி வரை நிறுத்தப்பட்டன.

அதேபோல் விமான நிலையத்தை சூழ்ந்த வெள்ளத்தால் சென்னையில் விமான சேவையும் டிசம்பர் 2ம்தேதி முதல் 7ம்தேதி வரை நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பொருட்கள் 10 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. இந்த பேரழிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியதாக தகவல்கள் வெளியாகின. லட்சக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின. பல ஆயிரம் கோடி மதிப்பிலான இழப்பை அப்போது சென்னை சந்திதது இன்று வரை மக்கள் மத்தியில் ஆறாத வடுவாக உள்ளது.

இதனால் எப்போது தொடர்ந்து கனமழை பெய்தாலும் 2015 வெள்ளத்தை சென்னை மக்கள் பயத்துடனே நினைவு கூர்கிறார்கள். அந்த வெள்ளத்துக்கான காரணம் என்ன என்ற கேள்வி இப்போதும் துரத்திக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரே மழைக்கே தாங்காது சென்னை என்ற நிலைமையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது வலுவாக எழுந்தது. அந்த தேர்தல் மூலம் முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அதன்படி, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வல்லுநர் குழு ஆலோசனையின் படி, சென்னை நகர் பகுதி முழுவதும் போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மழை நீர் வடிகால் அமைப்பு பணிக்காக சுமார் ரூ.4000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. இதன் எதிரொலியாக அடுத்தடுத்து சென்னையில் பெய்த மழையின் போது மழைநீர் தேங்காமல் வேகமாக வடிந்தன. இதற்கு எதிர்கட்சியினர் கூட முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 2023ல் பெய்த கனமழையின் போது இந்த மழைநீர் வடிகால் அமைப்புகள் பெரிய அளவில் உதவியது.

வெள்ள நீரை வேகமாக வெளியேற்றியதால், 2015ம் ஆண்டை விட 2023ல் அதிக அளவு மழை பெய்த போதிலும், மக்களுக்கான பாதிப்பும், சேதமும் 2015ம் ஆண்டை விட வெகுவாக குறைந்தது. இந்த சூழ்நிலையில் தான் தற்போது வரை சென்னை அருகே நிலை கொண்டிருக்கும் டிட்வா புயலால் சென்னையில் 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒரு சில பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிகால் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த இடங்களில் மழைநீர் வேகமாக வெளியேறி வருகிறது. மழை நீர் வடிகால்கள் நல்ல முறையில் தூர்வாரப்பட்டு, அடைப்புகள் எடுக்கப்பட்டுள்ளதால் வெள்ள நீர் வேகமாக அகற்றப்பட்டு வருகிறது.

மேலும், இறுதியாக கடலில் வடியக்கூடிய அடையாறு மற்றும் கூவம் நதிகளின் முகத் துவாரங்களும் தூர்வாரப்பட்டுள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் எந்தவித சிரமும் இல்லாமல் செல்கிறது. ஆனாலும், மெட்ரோ ரயில் மற்றும் பல்வேறு துறைகளால் தோண்டப்பட்ட பகுதிகளில் மட்டுமே மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாததால் அதுபோன்ற இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது. அந்த இடங்களிலும் மழைநீரை வேகமாக அகற்றும் வகையில் அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட இடங்களில் மழைநீரை வெளியேற்ற ஏற்கனவே மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. அசுர வேகத்தில் மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெறுவதால் மழைநீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்கள் தப்பி வருகின்றனர். இதுபோன்ற தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரு வெள்ளம் வந்தாலும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டு சென்னை தப்பி வருவது குறிப்பிடத்தக்கது. இவற்றை எல்லாம் பார்க்கும் போது, 2015ம் ஆண்டும் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்ைககளை துரிதபடுத்தி, அலட்சியம் காட்டாமல் செயல்பட்டிருந்தால் பல நூறு உயிர்களை சென்னை மக்கள் இழந்திருக்க மாட்டார்கள் என்பது மட்டுமே நினைவுக்கு வருகிறது.

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED அதிமுக கூட்டத்தில் விசிலா? பிடுங்கி வீசி எறிந்த நிர்வாகி