சென்னை: அந்தமானில் தொடர்ந்து வானிலை மோசமாக இருந்தால் அந்தமான்- சென்னை இடையே இயக்கப்படும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் சென்னை மற்றும் அந்தமான் விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிப்பட்டனர். அந்தமானில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது.
இதன் காரணமாக, நேற்று அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை-அந்தமான் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 9 மணி புறப்பட வேண்டிய சென்னை- அந்தமான் தனியார் ஏர்லைன்ஸ் விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டது. அதேபோல் அந்தமானில் இருந்து நேற்று காலை 9.40 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 1.50 மணிக்கு சென்னை வர வேண்டிய தனியார் விமானமும் ரத்து செய்யப்பட்டன.
மேலும், சென்னையில் இருந்து நேற்று காலை 7.05 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. காலை 7.40 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை 9.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த 2 விமானங்களும், அந்தமானில் இருந்து தாமதமாக சென்னைக்கு திரும்பி வந்தன. சென்னை மற்றும் அந்தமான் விமான நிலையங்களில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளாகினர்.
