ராயக்கோட்டை, டிச.2: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ராயக்கோட்டை மார்க்கெட்டில் சாமந்திப்பூ விலை அதிகரித்துள்ளது. ராயக்கோட்டை பகுதியில் ஏராளமான விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாமந்திப்பூவை சாகுபடி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி நல்ல விலையும் கிடைத்து வருகிறது. விழாக்கள், பண்டிகைகள், திருமண நாட்களில் சாமந்திப்பூ கிலோ ரூ.150 வரை விற்பனையாகும். சாதாரண நாட்களில் கிலோ ரூ.50க்கு குறையாமல் விற்பதால் விவசாயிகள் சாமந்திப்பூவை ஆர்வமாக சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த நாட்களில் விலை குறைவாக விற்பனையான நிலையில், இன்று பரணி தீபமும், நாளை கார்த்திகை தீபமும் கொண்டாட இருப்பதால் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், நேற்று ராயக்கோட்டை பூ மார்க்கெட்டில் சாமந்தி கிலோ ரூ.120க்கும், இதர பூக்கள் கிலோ ரூ.100க்கு குறையாமலும் விற்பனையானது. இதேபோல், மீராபால் என்னும் பட்டன் ரோஸ் கிலோ ரூ.160க்கும், ஆஸ்டல் பூ கிலோ ரூ.80க்கும், பன்னீர் ரோஜா கிலோ ரூ.80க்கும் விற்பனையானது. அதனால் விவசாயிகள் ஆர்வமாக பூக்களை பறித்து வந்து விற்பனை செய்கின்றனர்.
