போலி ஆவணங்கள் மூலம் ரூ.111 கோடியை சுருட்ட முயன்ற பஞ்சாயத்து தலைவர் கைது

பால்கர்: மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விக்ரம்காட் நகர் பஞ்சாயத்து தலைவரான நிலேஷ் என்கிற பங்கா பிங்கா ரமேஷ் பட்வாலே, ஓ.வி கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 7ம் தேதி, பொதுப்பணித்துறையிடம் ரூ.111.63 கோடி பணத்தை எடுக்க டிமாண்ட் டிராப்ட் (டிடி), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஜவஹர் கிளையில் சமர்ப்பிக்கப்பட்டது.

கோரிக்கை கடிதத்துடன் கூடிய காசோலையில் பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் மற்றும் கணக்காளரின் கையொப்பங்கள் இருந்துள்ளன. ஆனால் கடிதத்தை ஆய்வு செய்த போது, அதில் ‘கோடி’ என்பதற்கு பதிலாக ‘பில்லியன்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருந்தது. அதே போல, பொதுப்பணித்துறை கடிதம் எழுதும் பாணியில் மாறுபாடு இருந்ததை உணர்ந்த வங்கி அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

விசாரணையில் பொதுப்பணித்துறை பெயரில் சிலர் மோசடி செய்ய முயன்றது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து விக்ரம்காட் நகர் பஞ்சாயத்து தலைவர் நிலேஷ் மீதும் யஜ்னேஷ் அம்பிரே என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தானேவில் வைத்து நிலேஷை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருவதாக தெரிவித்தனர்.

Related Stories: