கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கி தேர்தல் நன்கொடைகளை குவிக்கிறது பாஜ: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கி தேர்தல் நன்கொடைகளை பாஜ குவித்து வருகிறது என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய பாஜ ஆட்சி அமைந்ததும் பல்வேறு திட்டங்களில் சலுகைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அத்தகைய சலுகைகளுக்கு கைமாறாக தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜவுக்கு நன்கொடை குவிந்து வருகிறது. கடந்த 2019 முதல் 2024ம் ஆண்டு வரை மொத்தம் ரூ.6,060 கோடி நன்கொடையாக பாஜ கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்றிருக்கிறது. இது கார்ப்பரேட் நிறுவனங்களின் மொத்த தேர்தல் பத்திர நன்கொடையில் 47.5 சதவிகிதமாகும். இது ஊழல் இல்லை என்றால் வேறு எது ஊழல் எனறு பாஜ தெளிவுபடுத்த வேண்டும்.

ஒன்றிய பாஜ அரசு ஆட்சி அமைந்ததும் நன்கொடையை கருப்புப் பணமாக பெறுவதை விட தேர்தல் பத்திர நன்கொடையாக ஆட்சி அதிகாரத்தின் மூலம் பெறுகிற அணுகுமுறையை கையாண்டு நன்கொடைகளை குவித்து வருகிறது. இதனால் தேர்தல் அரசியல் களம் சமநிலைத்தன்மையை இழந்து பாஜ வெற்றி பெறுவதற்கு தேர்தல் பத்திர நன்கொடை திட்டம் பெரும் துணையாக இருக்கிறது. இதன்மூலம் பாஜவின் தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் அம்பலமாகியுள்ளது. இனியும் பாஜவினர் புனிதர் வேஷம் போடுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: