×

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு ஈரோடு புதிய புறநகர் பேருந்து நிலையம் உட்பட ரூ.235.73 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ஈரோடு, நவ. 26: ஈரோடு மாவட்டத்தில் ரூ.605.44 கோடி மதிப்பீட்டில் அரசு வளர்ச்சி திட்ட பணிகளை இன்று தமிழக முதல்வர் தொடங்கி வைத்து, 1.85 லட்சம் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

தமிழ்நாடு முதல்வர் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து நேரில் கள ஆய்வு செய்தும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகின்றார். அந்த வகையில் இரண்டு நாள் பயணமாக கோவை, ஈரோடு மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை தந்தார். முதல் நாள் நிகழ்ச்சியாக கோவையில் செம்மொழி பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர், கோவையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை ஈரோட்டிற்கு முதல்வர் வருகை தந்தார். அவருக்கு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் தங்கினார். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் இன்று(26ம் தேதி) முதல்வர் பங்கேற்கிறார்.

இதன்படி, இன்று காலை 9.15 மணிக்கு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு மொடக்குறிச்சி தாலுகா ஜெயராமபுரத்தில், 4.90 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் மணிமண்டபம், பொல்லான் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து ஓடாநிலை சென்று, தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி, அங்கு புதிதாக அமையும் சிலை பணியை பார்வையிடுகிறார்.

அங்கிருந்து, ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். அங்கு, ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் உட்பட மாவட்டத்தில் முடிவுற்ற ரூ.235 கோடி மதிப்பிலான 970 பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். மேலும், ரூ.91 கோடி மதிப்பிலான 230 புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 304 பயனாளிகளுக்கு ரூ.278.62 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் விழா பேருரையாற்றுகிறார். தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் சித்தோடு ஆவின் வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட, ஆவின் அமைப்பை ஏற்படுத்திய எஸ்.கே.பரமசிவம் சிலையை முதல்வர் திறந்து வைத்து, மரியாதை செலுத்துகிறார்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட கலெக்டர் கந்தசாமி, தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர். தொடர்ந்து, முதல்வர், இன்று மாலை சித்தோடு கொங்கு மாளிகை திருமண மண்டபத்தில் நடக்கும் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, கார் மூலம் கோவைக்கு சென்று, விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Erode ,Tamil Nadu ,Erode district ,Tamil ,Nadu ,
× RELATED குழாய் வழி இயற்கை காஸ் பெற பதிவு செய்ய அறிவுறுத்தல்: மாவட்ட கலெக்டர் தகவல்