ஈரோடு, ஏப் 1: எல்.பி.ஜி காஸ் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு வணிக எல்.பி.ஜி. ஒதுக்கீட்டை தொடக்கத்தில் 20 சதவீதமாக குறைத்தது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வணிக வாடிக்கையாளர்கள் 70 சதவீதம் வரை பெற தகுதியுடைவர்களாக உள்ளனர். இருந்தாலும், சில நிபந்தனைகளை வாடிக்கையாளர்கள் பூர்த்தி செய்தால் மட்டுமே 70 சதவீத முழு ஒதுக்கீட்டு பலனை பெற முடியும்.
அனைத்து வணிக, தொழில்துறை எல்.பி.ஜி. நுகர்வோரும், கூடுதல் ஒதுக்கீட்டில் இருந்து எல்பிஜியை பெறுவதற்கு தகுதி பெற சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களில் பதிவு செய்ய வேண்டும். மேலும், எல்பிஜி நுகர்வோர், குழாய் வழி இயற்கை காஸ் (பி.என்.ஜி.) இணைப்புகளுக்கு பொருந்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகர எரிவாயு விநியோக நிறுவனங்களில் பதிவு செய்து பெறுவதற்கான தயார் நிலையை வெளிப்படுத்த வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் விருப்பமுள்ள வணிக, தொழில் துறை எல்பிஜி நுகர்வோர், பி.என்.ஜி. இணைப்புகளை பெறுவதற்கு நகர எரிவாயு வினியோக நிறுவனமான ஈரோடு பி.பி.சி.எல். நிறுவனத்தை 1800224344 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
