×

பண்ணாரி மாரியம்மன் கோயில் வரலாறு

 

சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராம மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு வனப்பகுதிகளுக்கு செல்வது வழக்கம். மக்கள் மாடுகளுக்கு பட்டிகள் அமைத்து வனப்பகுதிலேயே தங்கி கொள்வார்கள். தினசரி காலையில் மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டி செல்வார்கள். பின்னர் மாலையில் ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்கள். ஒரு பட்டியிலிருந்த காராம் பசு ஒன்று பால் கறக்கச் சென்றால் கறப்பதற்கு நில்லாமல் தன் கன்றுக்கும் கொடுக்காமல் இருப்பதை மாடுகளை மேய்ப்போன் அறிந்தான். மறுநாள் மாட்டினை பின் தொடர்ந்து சென்று கவனித்தார். அப்பசு தன் பாலை தினந்தோறும் ஓரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்குப்புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாக பொழிவதை மறைவிலிருந்து பார்த்தார். இந்நிகழ்ச்சியை பார்த்த அவர் மறுநாள் சுற்றுவட்டார கிராம மக்கள் ஊர் பெரியோர்களிடம் விபரத்தை சொல்லி அனைவரையும் அழைத்துக்கொண்டு மாட்டினை பின் தொடர்ந்து சென்று ஓரு குறிப்பிட்ட இடத்தில் காராம் பசு பால் சொரிவதை காண்பித்தார்.

மக்கள் அனைவரும் அவ்விடத்தை சுத்தம் செய்தபோது சுயம்பு லிங்க உருவம் வேங்கை மரத்தின் அடியில் இருப்பதைக் கண்டார்கள். அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஓருவருக்கு அருள் உண்டாகி தான் கேரளா மாநிலம் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரிலிருந்து பொதி மாடுகளை ஓட்டிக் கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன் என்றும் எழில் மிகுந்த இவ்வியற்கைச் சூழலில் தான் தங்கி விட்டதாகவும், தன்னை இனிமேல் பண்ணாரி என போற்றி வழிபட்டு வாருங்கள் எனவும் அருள் வாக்கில் கூறினார். அன்னையின் அருள்வாக்கின்படி அவ்விடத்தில் கணாங்குப் புற்கள் கொண்டு ஓருகுடில் அமைத்து கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அன்னையை வழிபட்டு வந்தனர்.

பின்பு ஊர்மக்களும், பெரியதனக்காரர்களும் அன்னையின் சிறப்புக்கருதி அன்னைக்கு விமானத்துடன் கூடிய சிறு கோயில் அமைத்து பத்மபீடத்துடன் திருவுருவம் அமைத்து வழிபட்டு வருகின்றனர். அம்பிகையை பயபக்தியுடன் சதாதுதிக்கும் அன்பர்களுக்கு வேண்டியதை வேண்டிய வண்ணம் அருள்பாலிக்கிறாள். பக்தர்கள் வந்து அபிஷேக ஆராதனைகள் செய்தும், பொங்கலிட்டும், வழிபடுகின்றனர். அமாவாசை, ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அன்னையை வழிபட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த திங்கட்கிழமையில் உத்திரம் நட்சத்திரத்தில் இரவு சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம், இக்கரை நெகமம் புதூர், தாண்டாம்பாளையம், ஆகிய ஊரைச் சார்ந்த பெரியதனக்கார்களும், தர்மகர்த்தாக்களும், ஆலய அதிகாரிகளும் வந்திருந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், பூச்சாற்று நடத்திடுவர்.

திங்கள் இரவு இரண்டு மணி அளவில் அம்மனை அழைக்கப்புறப்படுவர். தெப்பக் கிணற்றருகே சென்று அம்மனைக் குண்டத்தருகில் அழைத்து வருவர். அனைவரும் குண்டத்தருகில் வந்து அம்மனை வணங்கிப் பணிந்து நிற்பர். பூசாரி அம்மனுக்கு பூசை செய்து முதலில் குண்டத்தில் இறங்குவர். அவரைத் தொடர்ந்து ஆண்களும், பெண்களும் அம்மனைத் தொழுது குண்டத்தில் வரிசையாக இறங்குவர்கள். இந்நிகழ்ச்சி அடுத்த நாளாகிய செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி வரை நடைபெறும். அதன் பிறகு கால்நடைகளும் இறங்குகின்றன. கம்பம் நடுவிழா: பூச்சாற்றிலிருந்து ஒன்பதாம்நாள் செவ்வாய்கிழமை இரவு முன் கூறிய பெரியோர்களால் அம்பிகைக்கு ஆராதனை செய்து அன்றிரவு அக்கினிக்கம்பம் போடுவார்கள். அன்று முதல் அக்கம் பக்கத்தருகே இரவு காலங்களில் சோளர்களும், அருந்ததியினத்தாரும் தங்கள் வாத்தியங்களை முழக்கி, ஆடல், பாடல்கள் செய்வார்கள். காணவும் கேட்கவும் ஆனந்தம் உண்டாகும்.

அம்பிகை புறப்பாடு: பூச்சாற்று நிகழ்ந்தபின் மறுநாள் அம்மனை சப்பரத்தில் எழுந்தருள செய்வர். சப்பரம் ஊர்களின் வழியே உலா வரும் போது பக்தர்கள் பூஜைகள் செய்தும், காணிக்கை செலுத்தியும் தம் வேண்டுதல்களை நிறைவேற்றுவர். அம்மனின் புறப்பாடு நிகழும் வேளையில் சோலகர் எனப்படும் மலைவாசிகளும், அருந்ததி இனத்தாரும் வாத்தியங்களை முழக்குவர். பூச்சாற்றிலிருந்து எட்டாம்நாள் திங்கட்கிழமை அம்மன் கோயில் வந்து சேர்கின்றாள். வியாழனன்று மஞ்சள் நீர் உற்சவமும், திருக்கோயிலாரால் அன்னதானமும் நடைபெறும். மறுபூசை: குண்டம் திருவிழா நடந்த எட்டாம் நாள் திங்கட்கிழமை மறுபூசைத் திருவிழா நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை இரவிலேயே ஏராளமான பக்தர்கள் வந்து கூடி விடுவர். அம்பிக்கைக்கு விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிவித்து மலர் மாலைகளால் ஒப்பனை செய்யப்படும்.

சருகுமாரியம்மன்: பண்ணாரி அம்மன் தெப்பக்கிணற்றுக்கு அருகில் மேற்கு பார்த்த சிறு கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் சருக மகமாரியம்மையை நிலை கொளச் செய்யப்பட்டிருக்கிறது. வண்டிமுனியப்பன்: தெப்பக்கிணற்றுக்கு மேற்கில் பள்ளம் ஒன்று தென்வடலாக போகிறது. இதில் மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் இருக்கும். மற்ற காலங்களில் இருக்காது. தெப்பக் கிணற்றுக்கு செல்லும் வழிக்கு வடபுறமாக ஒரு மேடை மீது வண்டி முனியப்பசுவாமி அமர்ந்திருக்கிறார். அம்பிகையின் திருவிழா அன்று அவருக்கு சோளகர் சிறப்பாக பூசை நடத்தி
வருகின்றனர்.

 

Tags : Bannari Mariamman Temple ,Sathyamangalam ,
× RELATED வேடசந்தூரில் இருந்து கொடுமுடிக்கு...