மழைக்காலத்தில் வீடுகளை தண்ணீர் சூழும் நிலையில் வெள்ள தடுப்பு பணி மேற்கொள்ளாமல் புதிய குடியிருப்பு கட்டும் தமிழக அரசு: பெரும்பாக்கம் மக்கள் குற்றச்சாட்டு

சென்னை, ஜன.11: ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வீடுகளை தண்ணீர் சூழும் நிலையில், வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமலும் பெரும்பாக்கத்தில் தமிழக அரசு தொடர்ந்து புதிய குடியிருப்புகளை கட்டி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாடி உள்ளனர். சென்னையில் அடையாறு, கூவம் உள்ளிட்ட கால்வாய்களை தமிழக அரசு சீரமைத்து வருகிறது. இதற்காக, கரையோர பகுதியில் வசித்து வந்த மக்களை அங்கிருந்து அகற்றி, மறுகுடியமர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அப்புறப்படுத்தப்படும் மக்கள், தங்களுக்கு நகரின் உள்ளே வீடுகளையே ஒதுக்கீடு செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அவ்வாறு செய்யாமல் புறநகர் பகுதியில் உள்ள பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி பகுதியில் குடியமர்த்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் மீறி பொதுமக்கள் அகற்றப்பட்டு, மறு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் தீவுத்திடல் அருகில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து தங்களை அகற்றி பெரும்பாக்கத்தில் குடியமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். காரணம் பெரும்பாக்கம் பகுதியில் பள்ளி, மருத்துவமனை, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை. இதனால், மாணவர்கள் கல்விக்காக 40 கிலோ மீட்டர் பயணித்து சென்னை வர வேண்டியுள்ளது. மேலும், முறையான மருத்துவ வசதி இல்லாததால் நீண்ட தூரம் பயணித்து சென்னை வரும் அவல நிலை உள்ளது. குறிப்பாக வேலை வாய்ப்பு ஏதும் இல்லாமல், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், பெரும்பாக்கத்தில் மறு குடியமர்வு செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் பெரும்பாக்கத்தில் 1152 வீடுகள் மத்திய அரசு நிதி உதவியுடன் கட்டப்படுகிறது. புதிய முறையில் கட்டப்படும் இந்த திட்டத்திற்கு கடந்த வாரம் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஏற்கனவே உள்ள வீடுகளுக்கே முழுமையான அடிப்படை வசதிகளை செய்து தராத நிலையில் தற்போது மீண்டும் புதிய வீடுகள் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நகர்புற ஏழைகளுக்கான தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த வெனிசா பீட்டர் கூறியதாவது:2015, 2018, 2019 மற்றும் 2020 ஆண்டு பெய்த மழையில் பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில் ஒரு வாரத்திற்கு மேல் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. 3 நாட்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தனர். ஆனால் தொடர்ந்து பெரும்பாக்கத்தில் மக்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

நகரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் குடியமர்த்தபடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு பெரும்பாக்கத்தில் தொடர்ந்து வீடுகள் கட்டி மக்களை மறுகுடியமர்வு செய்வதை நிறுத்த வேண்டும். அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 3 முதல் 5 கி.மீட்டருக்கு உள்ளேதான் மறு குடியமர்வு செய்ய வேண்டும். தாழ்வான பகுதிகள், சதுப்பு நிலையம் மற்றும் பாதுகாகப்பட்ட பகுதிகளில் வீடுகளை கட்ட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

திறந்தவெளி சிறைச்சாலை

பெரும்பாக்கத்தில் வசிக்கும் சுரேஷ் கூறியதாவது: பெரும்பாக்கம் பகுதியில் முழுமையான பாதுகாப்பு வசதி இல்லை. குறிப்பாக குடியிருப்புகளில் மின் தூக்கி வசதி இருக்காது. செம்மஞ்சேரியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் மேடவாக்கம் மருத்துவமனையையும் சேர்த்து பார்த்து வருகிறார். இதனால் அவரச தேவைக்கு பெருங்குடிக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. குடிநீர் வசதியும் முழுமையாக செய்யப்படுதில்லை. இரண்டு ஆரம்ப பள்ளிகள் தான் உள்ளன. நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கு சோழிங்கநல்லூர்தான் செல்ல வேண்டி உள்ளது. இங்கு வசிக்கும் பலர் தங்களில் குழந்தைகளை நகரில் மையப்பகுதியில் உள்ள பள்ளிகளில்தான் படிக்க வைக்கின்றனர். முழுமையாக அடிப்படை வசதி இல்லாமல் திறந்வெளி சிறைச்சாலையாகதான் பெரும்பாக்கம் உள்ளது, என்றார்.

லைட்ஹவுஸ் திட்டம் பெரும்பாக்கத்தில் லைட் ஹவுஸ் திட்டத்தின் கீழ் புதிதாக 1152 வீடுகள் கட்டப்படவுள்ளது. இந்த திட்டமானது ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டு இருந்து, சுவர்கள் உள்ளிட்ட வீடுகளின் பல்வேறு பகுதிகளை இணைத்து கட்டும் புதிய முறை திட்டம் ஆகும்.

பயணத்திற்கு தினசரி ரூ.200 செலவு

பெரும்பாக்கம் குடியிருப்பில் உள்ளவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு நகரின் மையப்பகுதிக்கு தான் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கட்டுமான பணி மற்றும் மீன் விற்பனை பணிக்கு சென்று வருகின்றனர். இவர்களின் தினசரி ரூ.600 ஊதியம் ஈட்டினால் இதில் ரூ.200 பயணத்திற்கு மட்டுமே செலவு ஆகிறது.

* 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சென்னையில் 13.42 பேர் குடிசைகளில் வசிக்கின்றனர்.

* இதில் 36 ஆயிரம் பேர் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

* பெரும்பாக்கத்தில் மட்டுமே 30 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது.

Related Stories: