கரூர்: கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கை சிபிஐ விசாரித்துவருகிறது.
கடந்த 17-ம் தேதி முதல் கரூரில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் விசாரணை அலுவலகமானது செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்தில் இருந்து பல்வேறுகட்டங்களாக விசாரணை நடைபெற்றுவருகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர். வேலுசாமிபுரம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மின்வாரியத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தமிழக வெற்றிகழகத்தின் சென்னை பனையூர் அலுவலகத்திற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் சிசிடிவி ஆதாரங்களை கேட்டு சம்மன் அனுப்பியிருந்தனர். இதனை அடுத்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைபொதுச்செயலாளர் நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பபட்டது. அதன் அடிப்படையில் கரூர் சிபிஐ அலுவலகத்தில் 5 பேரும் ஆஜராகியுள்ளனர்.
