- கேரள அரசு
- உயர் நீதிமன்றம்
- திருவனந்தபுரம்
- கம்யூனிஸ்ட் அரசாங்கம்
- சந்திரசேகரன்
- இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்
- கேரளா
திருவனந்தபுரம்: ஊழல் செய்ய மாட்டோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் அரசு ஊழல்வாதிகளுக்கு துணை போவது ஏன் என்று கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐஎன்டியூசி கேரள மாநில தலைவராக இருப்பவர் சந்திரசேகரன். கடந்த 2006-2015 காலகட்டத்தில் இவர் கேரள முந்திரி வளர்ச்சிக் கழக தலைவராக இருந்தார். அப்போது முந்திரி இறக்குமதியில் பல கோடி ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. சந்திரசேகரன் மற்றும் அப்போதைய முந்திரி வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குனர் ரதீஷ் ஆகிய இருவரும் ஊழல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க கடந்த 2016ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் இருவர் மீதும் விசாரண நடத்த சிபிஐக்கு அரசு அனுமதி மறுத்தது.
3 முறை அனுமதி கேட்டும் சிபிஐக்கு கேரள அரசு அனுமதி வழங்க வில்லை. இதைத்தொடர்ந்து கேரள தொழில்துறை முதன்மை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி பதருதீன், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.நீதிபதி கூறியது: ஊழல் செய்ய மாட்டோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் அரசு ஊழல் வாதிகளுக்கு துணை போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் பரிதாபகரமானதாகும். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். எதற்காக ஊழல்வாதிகளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?
இது தொடர்பாக அரசு 1 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தொழில் துறை முதன்மை செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நீதிபதி கூறினார்.
